கடவுச்சீட்டு வரிசையை இல்லாமல் செய்ய அரசாங்கம் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்

14 0

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக ஏற்பட்டுள்ள வரிசையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயற்படுத்தக்கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் இந்த நிலைக்கு ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை தற்போதும் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் 83ஆயிரம் கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது.

2024ஆம் ஆண்டு மாதத்துக்கு 60ஆயிரம் வரை கடவுச்சீட்டு விநியோகித்திருக்கிறது. அரசாங்கம் தற்போது விநியோகித்துவரும் சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முயற்சித்தாலும் அதனை இதுவரை அறிமுகப்படுத்த முடியாமல் போயிருக்கிறது.

அதேநேரம் இலத்திரணியல் கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தி விநியோகிக்கும் வரை, சாதாரண கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்ய தவறி இருக்கின்றனர்.

அதற்கான வசதியை செய்துகொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் நிலையில் தற்போது 900 க்கும் குறைவாகவே விநியோகிக்கப்படுகிறது. அதனாலே கடவுச்சீட்டுக்காக பாரிய வரிசை ஏற்பட்டுள்ளது.

அத்துடன்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கடவுச்சீட்டு 30ஆயிரம் வரையே தற்போது கைவசம் இருக்கிறது. அதனால் தூரப்பிரதேசங்களில் இருந்து வரும் மக்களும் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இலத்திரணியல் கடவுச்சீட்டு விநியோகிக்க அரசாங்கம் முறையான கேள்விக்கோரல் இன்றி மேற்கொண்டதால், அந்த நடவடிக்கையை முன்னெடுக்க குறித்த நிறுவனத்துக்கு முடியாது.

அதனால் அரசாங்கம் ஆரம்பமாக முறையான கேள்விக்கோரலுடன் இதனை செய்திருக்க வேண்டும் என்பதுடன் இந்த நடவடிக்கையை செயற்படுத்தும்வரை வழமையாக விநியோகிக்கும் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

அதேநேரம் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள தேவையான கொள்வனவு கட்டளையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்காமல் இருந்துள்ளது. இதனால் அரசாங்கத்துக்கு ஒரு மாதத்துக்கு ஏற்படக்கூடிய நட்டம்  1100 மில்லியன் ரூபாவாகும்.

அரசாங்கம் இலத்திரணியல் கடவுச்சீட்டு முறையை முறையான கேள்விக்கோரலுடன் செயற்படுத்தாமல் முன்னெடுத்தது தவறு என்பதுடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் இலத்திரணியல் கடவுச்சீட்டும் இல்லை. சாதாரண கடவுச்சீட்டும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பில் விரைவான தீர்வொன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.