ஜனநாயக விரோதிகளால் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்!

28 0

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதையும்,  இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. அழிவை தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்,  எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கைகளை கூப்பி கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தை அழிக்கும் தரப்பினரை வீழ்த்த அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன்.அதற்காக இனி சுயாதீனமாக செயற்படுவேன் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் இந்த பாராளுமன்றத்தை நிச்சயம் கலைப்பார். ஆகவே இன்றைய அமர்வு  இறுதி அமர்வாக கூட இருக்கலாம்.

மிகவும் கவலையுடன் உரையாற்றுகிறேன்.நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை காண முடிகிறது. இந்த நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற தரப்பினர் ஒட்டுமொத்த மக்களையும் குறிப்பாக இளைஞர்களை  மூளைச் சலவை செய்து 75 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்று பொய்யுரைத்து, அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளார்கள்.

நாட்டு மக்களை தவறாக வழி நடத்தி நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை காண முடிகிறது. சிறந்த அரசியல் குடும்ப பின்னணியில் தான் நான் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தேன். மக்களுக்கு இயலுமான வகையில்  சேவையாற்றியுள்ளேன்.வென்னப்புவ தேர்தல் தொகுதி உட்பட புத்தளம் மாவட்டத்துக்கு இயலுமான வகையில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளேன்.

அருந்திக பெர்ணான்டோ பாராளுமன்றத்துக்கு தெரிவாகி மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்று எவராலும் குறிப்பிட முடியாது. 225 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தம்மால் இயலுமான வகையில் தமது பிரதேசங்களுக்கு சேவையாற்றியுள்ளார்கள். ஒரு தரப்பினர் எடுத்த தவறான தீர்மானங்களினால் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டையும், நாட்டு மக்களையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் இந்த தருணத்தில் ஜனநாயகத்தை மதிப்பவர்களும்,   அதனை பாதுகாப்பவர்களும் பாராளுமன்றத்தை தீ வைக்க முற்பட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது. ஜனநாயகத்துக்காக ஒன்றுபட வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான தரப்பினருக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எவரும் செயற்பட கூடாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கடந்த 1 ஆம் திகதி சிலாபம் தேர்தல் தொகுதியில்  பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினேன். பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தற்போது செயற்படுகிறோம். ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினர்கள் எவரும் உண்மையில் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்மை நோக்கத்துடன் ஆதரவு வழங்கி அவரை ஜனாதிபதியாக்க ஒத்துழைப்பு வழங்குகிறோம்.ஆனால் தற்போது மறைமுக சக்தி ஒன்று செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயகத்துக்கு எதிரான தரப்பினரை ஆட்சிக்கு கொண்டு ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெறுகிறதா?  என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஜனநாயகத்தை மதிப்பவர்கள், பாதுகாப்பவர்கள் தற்போதைய அவதான நிலையை கருத்திற் கொண்டு ஒன்றுபட வேண்டும். இன்று அரச சேவையாளர்கள் தபால் மூல வாக்களிக்கும் போது ஒட்டுமொத்த அரச சேவையாளர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

1989 காலப்பகுதியிலும்,  விடுதலை புலிகள்  போராட்டத்திலும் வடக்கு மற்றும் தெற்கில் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். தற்போதும் இளைஞர்களை  இலக்காகக் கொண்டு  மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி,தோல்வி என்பது  ஜனநாயக ரீதியானது.

தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர்  மீண்டும் போராட்டத்துக்கு செல்லவும்,  வீடுகளை தீயிடவும் பேசுவதாயின் அது பாரதூரமானது. இன்று (நேற்று)  முதல் நான் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளேன். இந்த நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் தரப்பினரை தோற்கடிக்க முடியும். இதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பேன்.

எதிர்க்கட்சித் தலைவருடன் நான் கலந்துரையாடவில்லை. ஏற்பட போகும் அழிவை உணர முடிகிறது. அழிவை தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கைகளைக் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தை அழிக்கும் தரப்பினரை வீழ்த்த அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன்.