ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து தமது வாக்கினை வீணாக்க வேண்டாம்

13 0

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 8 ஆம் திகதி  ஆளும் கட்சி பக்கம் அமரும். அனைத்து அர தரப்பினரும் சஜித் பக்கம் உள்ளார்கள். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து தமது வாக்கினை வீணாக்க வேண்டாம். மக்கள் விடுதலை முன்னணியினர் வைராக்கியத்துடன் அரசியல் செய்கிறார்கள். இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால்  நாடு இறந்தது என்றே கருத வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04)  இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்டு விட்டோம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் பாடம் கற்பிக்க நாட்டு மக்கள் தயாராகவுள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களை பொறுப்பேற்றார்.ஏனையோர் தப்பிச் சென்றார்கள் என்று ஆளும் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் உண்மையில் ராஜபக்ஷர்களும், பொதுஜன பெரமுனவினரும் தமது பாதுகாவலனாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தார்கள்.

2019 ஆம் ஆண்டு வறுமை நிலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக காணப்பட்டது ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 70 இலட்சமாக உயர்வடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பின் சுமை நடுத்தர மக்கள் மீது முழுமையாக திணிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரிசை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அரச வருமானம் பற்றி பேசப்படுகிறது. 800 பில்லியன் ரூபா அரச வருமானத்தை இழப்பதற்கு கையுயர்த்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியமிபலாபிட்டிய இன்று அரச வருமானம் பற்றி பேசுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயத்துறை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து பார்த்தேன். ஒரு ஹேக்கர் விவசாய காணியின் விளைச்சல் ஊடாக வருடாந்தம் 30 இலட்சம் பெறுவதாக குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின்  விவசாயம்  செய்யக் கூடிய 60 இலட்சம் ஏக்கர் காணியில் இருந்து வருடத்துக்கு பல பில்லியன் ரூபா வருமானத்தை பெற முடியும். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்.ஒரு ஹேக்கர் காணியில் சிறுபோகத்திலும், பெரும் போகத்திலும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 இலட்சம் பெறுமதியான விளைச்சலையே பெற முடியும்.

எவ்வாறான  நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அறிய முடிகிறது. மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்தை கைப்பற்ற நாங்கள் இடமளிக்க மாட்டோம்.  இலங்கையில் வாழும் சகல இன மக்களின் ஆதரவுடன்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி  ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சி பக்கம் அமரும். அனைத்து அர தரப்பினரும்  சஜித் பக்கம் உள்ளார்கள். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து தமது வாக்கினை வீணாக்க வேண்டாம்.  நடுத்தர மக்கள் தொடர்பில் சஜித் பிரேமதாச மாத்திரமே கவனம் செலுத்துவார்.

மக்கள் விடுதலை முன்னணியினர் வைராக்கியத்துடன் அரசியல் செய்கிறார்கள். இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால்  நாடு இறந்தது என்றே கருத வேண்டும்.  நாட்டு மக்கள்  சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.