காட்டு பகுதியில் முள்ளிக்குள மக்களுக்கு வீட்டுத் திட்டம்

396 0

download-3-5-450x338மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டு பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து  நிரந்தரமாக குடியமரத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான 2500 ஏக்கர் காணிகளை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கைப்பற்றிவைத்திருக்கும் இலங்கை கடற்படையினர், கடந்த ஒன்பது வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர விடாது தடுத்து வருகின்றனர்.
யுத்தம் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி  முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து வெளியேறிய  167குடும்பங்கள் முருங்கன், தாழ்வுபாடு, நானாட்டான், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிகமாக குடிசைகள் அமைத்தும்,உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15 ஆம் திகதி முள்ளிக்குளம்  கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டு பிரதேசத்தின் சிறிய பகுதி ஒன்று  துப்பரவு செய்யப்பட்டு முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.
முள்ளிக்குளம் பிரதேச மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்துமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் வேண்டுகோலுக்கு அமைவாக கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  5 ஆம் திகதி  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் 2014 ஆம் ஆண்டு கடற்படையினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் 600 ஏக்கர் வயல் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இருப்பினும், வயல் நிலங்கள்,வீட்டுக் காணிகள் உள்ளடங்கலாக 2500 ஏக்கர் மக்களின் கணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த நிலையிலேயே, முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்காலிகமாக வசிக்கும்  பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் 81குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கி, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் 2500 ஏக்கர் காணிகளை நிரந்தரமாக கைப்பற்றும் முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். .