லிந்துலையில் சுகாதார காரியாலயத்தை வேறு இடத்திற்கு இடமாற்றுகோரி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

34 0

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த  தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் குறித்து தெரியவருவதாவது,

நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  அமைந்துள்ள கட்டிடத்தின் பின்புறத்தில் காணப்படும் பாரிய மண்மேட்டிலிருந்து  மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால், அந்த இடத்தை காலிசெய்யுமாறு லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான பொருத்தமான கட்டிடத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம் இந்த காரியாலயம் அமைந்துள்ள பகுதியிலுள்ள மலை உச்சியில் இருந்து கற்கள் உருண்டு விழுந்ததில் காரியாலய கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும், இதனால் தங்களது உயிருக்கும்  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  தெரிவித்தனர்.

மேலும், இங்கு சில நாட்களாக கட்டிடத்தின் மீது கற்பாறைகள் மற்றும் மண்மேடுகள் சில சரிந்து விழுவதாக  அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்கூரை, கட்டிடத்தின் ஓடுகள் உடைந்துள்ளதாகவும், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் என்பன பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு தெரிவித்தனர்.

இக்கட்டடத்தின் பின்புறமாக கற்கள் உருண்டு கிடப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  இக்கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடந்த காலங்களில் அறிவித்திருந்த போதிலும்  இதுவரை சுகாதார வைத்திய அதிகாரி கட்டிடத்தை  உரிய இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் உயிர்கள் பாதிக்கப்பட வேண்டும் எனவும் இந்த கட்டிடத்தை வேறு பாதுகாப்பான இடத்திற்கு விரைவில் மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.