நடுத்தர மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை – ஜகத் குமார சுமித்ராராச்சி

13 0

அஸ்வெசும நலன்புரி திட்டத்தால் சமுர்த்தி  திட்டம்  இயற்றை மரணமடைந்துள்ளது. தகுதியுள்ள 8 இலட்சம் பேர் நலன்புரி கொடுப்பனவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். நடுத்தர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தவில்லை.

ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு  வழங்க தீர்மானித்துள்ளேன்   என குறிப்பிட்டு,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி குறிப்பிட்டு எதிர்க்கட்சி பக்கம்   சென்று எதிரணியின் ஆசனத்தில் அமர்ந்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் தொடர்பில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு பேசியுள்ளேன்.ஆனால் எதற்கும் தீர்வு கிடைக்கவில்லை.  அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பை ஆரம்பத்தில் இருந்து வெளிப்படுத்தியுள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமுர்த்தி  நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இதனால் சமுர்த்தி நலன்புரி பயனாளர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார்கள். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தால் சமுர்த்தி பயனாளர்களில் 8 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சமுர்த்தி நலன்புரித் திட்டத்துக்கு வருடத்துக்கு 60 பில்லியன் ரூபா மாத்திரமே செலவானது.ஆனால் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு 206 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளது. நலன்புரி  திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து அரசாங்கத்துடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.ஆனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசிய என்னை விடயத்துக்கு பொறுப்பான  அமைச்சர்கள் பிரச்சினை என்று விமர்சித்தார்கள்.

சமுர்த்தி பயனாளர்கள் தொடர்பில் கடந்த மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற  பேச்சுவார்த்தையின் போது முரண்பாடான விடயங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. சமுர்த்தி சங்கத்தின் பிரதிநிதியாளர் என்ற அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருக்க முடியாது.

நடுத்தர மக்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உணர்வுபூர்வமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கிறார்.ஆகவே நடுத்தர மக்களின் நலனுக்காக ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்.என்று குறிப்பிட்டு ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சி பக்கம் சென்று எதிரணியின் ஆசனத்தில் அமர்ந்தார்.