ரணில் விக்கிரமசிங்க கடும் இனவாதி : தமிழ் மக்களை பழிவாங்கியுள்ளார் – சுமந்திரன் கடும் சாடல்!

14 0

நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க  செயற்படுகின்றார். இதனை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும் .ரணில் – ராஜபக்ஷ என்று குறிப்பிடுவதை ஜனாதிபதி நிரூபித்து விட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூல தனிநபர் பிரேரணை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன். இந்த பிரேரணையின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. தனிநபர் பிரேரணை தொடர்பான நிலையியல் கட்டளை பிரிவுக்கு சட்ட மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் செப்டம்பர் 3ஆம் திகதி மூன்றாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணங்கிய போதும்,  அது இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் இதில் அரசியல் தலையீடு இருந்த காரணத்தினாலா இது தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று கேட்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்கு காரணமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கவே இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் நிலையியல் கட்டளையை மீறியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் தீர்மானத்தை மீறியும் இதனை தாமதப்படுத்தியுள்ளனர். இது தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல் செயற்படாகும்.

ஜனாதிபதியுடன் நான் இந்த சட்டமூலம் தொடர்பில் கதைத்த போது இதில் பிரச்சினையில்லை. மூன்றாம் வாசிப்புக்காக எடுக்கலாம்  என்றும் இது தொடர்பில் சபை முதல்வருக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் மூன்றாம் வசிப்புக்காக நிகழ்ச்சி நிரலில் சட்டமூலம்  உள்ளடக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க   பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்ற போது ரணில் -ராஜபக்‌ஷ என்றே அவரை கூறினர். ஆனால் அவரே அதனை நிரூபித்துள்ளார். அவருக்குள்ள அதிகாரத்துக்கமைய இந்த சட்டமூலத்தை தாமதப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி  நிறைவேற்று அதிகார  மற்றும் அமைச்சரவையின் பிரதானியே. இதன்படி அவரால் இது தொடர்பில் அறிவிக்க முடியும். ஆனால் இறுதி நேரத்தில் ஏன் அவர் இவ்வாறு செய்ய வேண்டும். இது தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடே ஆகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் முன்னாலும் நாட்டு மக்கள் முன்னாலும் இனவாதியாக காட்டப்படுவார். தமிழ் மக்களுக்கு எதிராக அவர் செய்யும் இந்த விடயம், தான் செய்வதாக வழங்கிய வாக்குறுதி எதனையும் அவர் செய்ததில்லை. அவர் இப்படியாக கடைசி நேரத்தில் தடுத்துள்ளார். நான் செய்ய இருந்த விடயம் என்றும் அதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறிவிட்டு கடைசி நேரத்தில் எங்கள் மீது காட்டும் வெறுப்பாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதற்கான வெளிப்பாடே இது. தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை  பார்க்க வேண்டும் என்றார்.