உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிப்பு

41 0

கறுப்பு பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ள 41 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக  விசாரணைகளை மேற்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவே  உண்மை மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை கொண்டு வர 69 இலட்ச மக்களாணையுடன் வந்த இந்த அரசாங்கத்துக்கு  தார்மீக உரிமை கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர்களான  விமல் வீரவன்ச, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

கலக்கமடைய வேண்டாம் நீதிமன்றத்தை நாடுங்கள், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ததன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின் போது உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான  ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது.இதனை  தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் விமல் வீரவன்ச,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  30/ 1  தீர்மானத்துக்கு அமைவாகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.  யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகளில் 41 பேரின் பெயர் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்தியே பொதுஜன பெரமுன பாராளுமன்றத்துக்கு தெரிவானது. மக்களாணை இன்றும் இருக்குமாயின் இவ்வாறு இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை கிடையாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விமல் அணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க,  இராணுவத்தினரை பலிகடாவாக்கும் வகையில் தான் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் பற்றி தற்போது பேசப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தல் பற்றி பேசுவது அவசியமற்றது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் நாட்டின் சுயாதீனத்துக்கு முரணானது என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த,  இது ஒரு சட்டமூலம் மாத்திரமே நீதிமன்றம் செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.ஆகவே கலக்கமடைய வேண்டாம். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ததன் பின்னரே  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.