மத்துகமவில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு ; நால்வர் கைது

36 0
களுத்துறை, மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 53 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் பெண் உட்பட நால்வர் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (02) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுரலிய, அவுலேகம மற்றும் போகஸ்வெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 37 மற்றும் 49 வயதுடைய மூன்று நபர்களும் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து ஆடைகள், இலத்திரனியல் உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.