தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 17, 500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானம்

44 0

வாழ்க்கைச்செலவு மற்றும்  பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு தனியார் துறையின்  அடிப்படை சம்பளத்தை 17ஆயிரத்தி 500 ரூபாவாக நிர்ணயிக்க தொழில் அமைச்சு தீர்மானித்து சட்டமூலம் சமர்ப்பித்துள்ளது என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தனியார் துறையில் சேவை செய்துவரும் ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் 12 ஆயிரத்தி 500 ரூபாவாகவே தற்போது இருந்து வருகிறது. அந்த தொகையை 5ஆயிரம் ரூபாவால் அதிகரித்து, தனியார் துறையினரின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை 17ஆயிரத்தி 500 ரூபாவாக அதிகரிக்க இந்த சட்டமூலம் ஊடாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  வாழ்க்கைச்செலவு மற்றும்  பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்.

அத்துடன் இந்த 17ஆயிரத்தி 500 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 2016 வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 3,500 ரூபாவும் அதிகரிக்கப்படுகிறது. அதன் பிரகாரம் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளமாக 21ஆயிரம் ரூபா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் இராஜாங்க அமைச்சராக இருந்து இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியுமானதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

எனவே, தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு கீழ் தொழில் செய்யும் நபர்களுக்கு இந்த குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை வழங்க சட்ட பூர்வமாக அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேகைக்கால பணிக்கொடை மற்றும் தொழில் பாதுகாப்பு என்பனவும் இந்த சட்டமூலம் ஊடாக உறுதி செய்யப்படுகிறது என்றார்.