தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான மக்கள் அணியைக் கண்டு எதிரணியினர் பதற்றத்தில் – சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

59 0
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மக்கள் அணிதிரண்டு கொண்டிருக்கின்ற விதத்தைக் கண்டு எதிரான குழுவினர் பதற்றமடைந்து மிகவும் கீழ்த்தரமான சேறுபூசல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின்  ஊடக சந்திப்பின் போதே   தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மக்கள் அணிதிரண்டு கொண்டிருக்கின்ற விதத்தைக் கண்டு எதிரான குழுவினர் பதற்றமடைந்து மிகவும் கீழ்த்தரமான சேறுபூசல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதலாம் திகதி நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்தோம்.

அவர் 22 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்களால் மக்களின் ஆதனங்களை கொள்ளையடித்தல், வாகனங்களை கைப்பற்றிக்கொள்ளல் போன்ற செயல்களை புரிவார்களென பாரிய பீதிநிலையொன்றை சமூகத்தில் விதைக்க முயற்சி செய்கிறார்.

அதைபோலவே உயர்நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார மற்றுமொரு பீதியை கிளப்பி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியுடன் பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெறுமென பிரச்சாரம் செய்து வருகிறார்.

1977 தோ்தலின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

1994 இல் இருந்து இற்றைவரை அவ்விதமான தோ்தல் வன்செயல்கள் இலங்கையில் இடம்பெறவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இதுவரையும் அவர்கள் கூறுகின்ற விதத்தில் தோ்தல் வன்செயல்கள் உருவாகவில்லை.

அதனால் 22 ஆம் திகதியோ அதன் பின்னரோ அவர் கூறுகின்ற விதத்திலான வன்செயல்கள் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை.

அதைபோலவே தபால் மூல வாக்காளர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற விதத்திலான செய்திகளை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தோன்றியுள்ள மக்கள் ஆதரவினை ஓரளவிற்கேனும் குறைக்க இவை மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாங்கள் மக்களின் நிலையான வைப்புக்களை அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக்கொள்வதாக ஹந்துன்னெத்தி கூறினார் என நேற்று ஆங்கில செய்தித்தாளொன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்த நாட்டின் மனிதர்களுக்கு ஆதனங்களை வைத்துக்கொள்வதற்கான உரிமை சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணம் என்பது மக்களின் ஆதனங்களில் ஒன்றாகும்.

சட்டமொன்றை விதிப்பதாயின் அதற்கு முன்னர் சட்ட மூலம் உயர்நீதிமன்றத்திற்கு செல்லும். உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்த பின்னர்தான் தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்து விட்டது என்பதற்காக நினைத்தவாறு சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளமுடியாது. பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம்.

எமது நாட்டு மக்களிடம் நான் அதனை மிகுந்த அன்புடனும் கௌரவத்துடனும் குறிப்பிடுகிறேன். அரசியல் சம்பந்தமாக மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அவ்விதமே செயற்படுத்தி வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி என்ற வகையில் அநுர குமார திசாநாயக்கவை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.