-
- ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அரசியல் தீர்வினால் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தமுடியாது
- புதிய அரசியலமைப்பு தமிழர்களை சுயநிர்ணய உரிமையுடைய தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும்
- போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஊடாக விசாரணை அவசியம்
- மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தோளோடு தோள் நிற்போம்
தமிழர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் கூறிவரும் பின்னணியில், இனப்பிரச்சினையைப் பேசுபொருளாக்கி, அதன்மீது தென்னிலங்கையினதும், உலகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் அரியநேத்திரனைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்றோம். கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்கள் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள்.
இருப்பினும் அவர்களில் வென்றவர்களும் சரி, தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வைத் தரவுமில்லை. இனவழிப்பு செயற்பாடுகளை நிறுத்தவுமில்லை. எனவே அதனை எதிர்த்து, தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் அரியநேத்திரனுக்கு வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதில் தமிழ் மக்கள் சார்பில் பா.அரியநேத்திரனை பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருக்கும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று செவ்வாய்க்கிழமை மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அவ்விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
தமிழ்த்தேசிய இனமானது கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகின்றது. இப்போராட்டத்தின் ஒரு வழிமுறையாக, தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை சங்கு சின்னத்தின்கீழ் தமிழ் பொதுவேட்பாளராக முன்னிறுத்தியிருக்கின்றோம்.
தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது தமிழ்த்தேசிய கட்சிகளும், தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியதோர் கட்டமைப்பாகும். இலங்கைத் தமிழரசுக்கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய சகலரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டுவருகின்றார்கள்.
ஈழத்தமிழர்களாகிய நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் பல ஆண்டுகால வரலாற்றையும், மரபுவழித் தாயகத்தையும், தனித்துவமிக்க பண்பாட்டையும் கொண்டவர்களாவோம். இலங்கை பல்லின, பல மத, பல மொழி மற்றும் பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இருப்பினும் இலங்கையின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும், கூர்மை அடைவதற்கும், இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும்.
தமிழர் தேசத்தின் இருப்பையும், தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும், பின்னர் ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக்கொடிய விளைவே இறுதிப்போரில் நிகழ்ந்த உச்சமான இனவழிப்பாகும். இருப்பினும் இன்றுவரை இனவழிப்புக்கு பரிகார நீதி கிடைக்கவில்லை என்பதுடன், இனவழிப்பு செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை.
மாறாக திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் பகுதிகள் தொல்லியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடயங்கள் துரிதமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26 க்கும் மேற்பட்ட விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் ஒருபுறம் சிங்கள பௌத்த மயமாக்கமும், மறுபுறம் நில அபகரிப்பும் தொடர்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப்பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இதுவரையில் ஆட்சிபீடமேறிய எந்தவொரு அரசாங்கமும் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரும்பவில்லை.
வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்குநாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச்சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய நீதிபதியொருவர் நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.
வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக்குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும், அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்தக் கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அம்பாந்தோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையுடன் குடியமர்த்தி ‘நாமல்கம’ எனும் கிராமமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் படையினர் முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றில் மிகக்குறிப்பிடத்தக்களவு காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழர் தாயகப்பகுதிகளில் பெருமளவான காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகளில் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. இருப்பினும் பெரும்பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அரச புள்ளிவிபரங்கள் பொய் கூறுகின்றன. கடந்த 15 வருடங்களாக பௌத்த சிங்கள மயமாக்கலும், காணி அபகரிப்பும் அரசின் கொள்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15 ஆண்டுகளின் பின்னரும் அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல்கைதிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிகோரி நீண்டகாலமாகப் போராடிவருகின்ற போதிலும் அவர்களுக்கான நீதி இன்னமும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்ச்சியைத் துண்டாடுதல், இன விகிதாசாரத்தைக் குறைத்தல், நிலத்தைப் பறித்தல், தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழித்தல், அங்கு சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபித்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வெவ்வேறு வடிவங்களேயாகும்.
இனவழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, நாட்டில் பொருளாதாரப்பிரச்சினை தான் உண்டு என்று பொய்யான தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்பவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மறுத்து, இனவழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தமையினாலேயே நாடு கடனாளியாகியது.
ஆகவே இப்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் யுத்தத்தை நடத்துவதற்காக அரசாங்கம் வாங்கிய கடன்களேயாகும். ஆனால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்தவொரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் படைத்தரப்பின் ஆட்தொகை, குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருமளவான செலவில் பராமரிக்கப்பட்டுவருகின்றது.
இத்தகைய இராணுவ பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும், நம்பிக்கையையும், தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பவேண்டியது அவசியம். அதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும், அவசரத்தையும் தென்னிலங்கைக்கும், உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்படமுடியாத விதத்தில் உணர்த்த வேண்டியது அவசியமாகும்.
தமிழர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் கூறிவரும் பின்னணியில், இனப்பிரச்சினையைப் பேசுபொருளாக்கி, அதன்மீது தென்னிலங்கையினதும், உலகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் அரியநேத்திரனைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்றோம். கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்கள் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களில் வென்றவர்களும் சரி, தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வைத் தரவுமில்லை. இனவழிப்பு செயற்பாடுகளை நிறுத்தவுமில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறை களமிறக்கப்பட்டிருக்கும் தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னிறுத்தி தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலகுக்கும், தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிராகப் பரிகார நீதியைக் கோருவார்.
அதற்கமைய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்கவேண்டும்.
இனப்பிரச்சனையைத் தீர்க்கும் நோக்குடன் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு தமிழர்களை இறைமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அது நாட்டின் பன்மைத் தேசிய பண்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை ளஒரு பன்மைத் தேசிய அரசாகக் கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு அரசியல் தீர்வினாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை ஒருபோதும் திருப்திப்படுத்தமுடியாது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டமையவேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லிம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் குறித்து திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாராக இருக்கின்றோம்.
மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை அங்கீகரிக்கின்றோம். அதன்படி அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படவேண்டும். அத்தோடு அவர்களது உடனடிப் பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் தீர்வுகள் வழங்கப்படவேண்டும். அதனை முன்னிறுத்தி போராட்டத்தில் நாம் மலையக மக்களுடன் தோளோடு தோள் நிற்போம்.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்பின் ஊடாக முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், மீள்நிகழாமை உறுதிப்படுத்தப்படவேண்டும். அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பைத் தடுக்கவும், இனவழிப்பின் ஓரங்கமாக நமது வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் இயற்கை சமநிலை குலையாதவண்ணம் செயற்திறன்மிக்க தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும்.
தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதிசெய்யப்படவேண்டும். நிரந்தர தீர்வு கண்டடையப்படும் வரை போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
இவையே தமது பொதுநிலைப்பாடு என்பதை வெளிக்காட்டும் வகையில் தமிழ் மக்கள் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். அரியநேத்திரனுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ் மக்கள் தமக்குத் தாமே வழங்கும் வாக்குகள் தான் என்பதையும், தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள் தான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.