திருச்சிற்றம்பலம் அம்மன் சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

18 0

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் பழமைவாய்ந்த புராதனவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில்கூடியிருந்த கிராம மக்கள் மற்றும்பக்தர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு, மும்பை வழியாக கடத்திச்செல்லப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த அருங்காட்சியகம் சிலையைக் காட்சிப்படுத்தி நாள்தோறும் பொருள் ஈட்டி வருகிறது. தற்போது அந்த சிலையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை, அருங்காட்சியகம் மேற்கொண்டு வருகிறது. எனவே, ரூ.10 கோடி மதிப்பிலான சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலையை 3 மாதங்களுக்குள் மீட்டு, இந்தக் கோயிலுக்கு கொண்டுவர இந்து சமயஅறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கிராம மக்களின் ஆதரவுடன், சிலையை மீட்டுக்கொண்டு வர சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.