இலங்கை தொடர்பான தீர்மானத்தை மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்புச் செய்யுங்கள்

44 0

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை நிறுவும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்வரும் கூட்டத்தொடரின்போது மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்யுமாறு 7 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஆணையை காலநீடிப்புச் செய்யுமாறுகோரி சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை, பிரான்சிஸ்கன் இன்டர்நெஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பான சர்வதேச நடவடிக்கைக்குழு மற்றும் சமாதானம், நீதிக்கான இலங்கை பிரசாரம் ஆகிய 7 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கம்வகிக்கும் நிரந்தர உறுப்புநாடுகள் மற்றும் கண்காணிப்பாளர் நாடுகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

2021 இல் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் மற்றும் 2022 இல் காலநீடிப்பு செய்யப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 57 ஆவது கூட்டத்தொடரின்போது குறைந்தபட்சம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இருப்பினும் 26 வருடகால உள்நாட்டுப்போரின்போது படையினரால் சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக இழைக்கப்பட்ட மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன உறுதிசெய்யப்படவில்லை.

எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ந்து உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்துவரும் அதேவேளை, மீறல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேற்குறிப்பிட்டவாறான தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மிகப்பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு வழிவகுத்ததுடன், அதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டை தீவிர பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது. நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களும், சிவில் சமூகப்பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் 46/1 தீர்மானத்தின் ஊடாக அளிக்கப்பட்ட ஆணையை மீளப்புதுப்பிப்பதானது சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்களில் ஈடுபட்ட நபர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், தற்போது இடம்பெற்றுவரும் மீறல்களைக் குறைப்பதற்கும், மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கும், நீதியை நிலைநாட்டும் அதேவேளை, மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறு இலங்கைக்குள் இருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உதவுவதற்கும் மிக அவசியமானதாகும்.

ஏனெனில் இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகள் தொடர்பிலோ அல்லது கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலோ எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.