வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு 2கே கிட்ஸிடம் வரவேற்பு இல்லாதது ஏன்?

43 0

வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்கா நவீனப்படுத்தப்படாததால் 2கே கிட்ஸ் குழந்தைகளிடம் வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா நகரின் முக்கிய பொழுதுப்போக்கு இடங்களில் ஒன்றாக உள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்த செலவில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வந்து செல்லக் கூடிய இடமாக ராஜாஜி பூங்கா உள்ளது. சனி, ஞாயிறு தவிர, இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் சலுகை கட்டணத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பூங்காவை அதிமுக ஆட்சியில் 1995ம் ஆண்டு பிப்., 25ம் தேதி முன்னாள் சட்டபேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அ.மா.பரமசிவன், எம்பி.விவி.ராஜன் செல்லப்பா போன்ற அக்காலத்து முக்கிய மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பூங்கா, ஆரம்ப காலத்தில் 90 கிட்ஸ் குழந்தைகளை ஈர்க்கக்கூடிய சிறந்த பொழுதுப்போக்கு இடமாக இருந்தது. தற்போது காலத்திற்கு தகுந்தார்போல் நவீனப்படுத்தப்படாமல் கே கிட்ஸ் குழந்தைகளை, இந்த பூங்கா எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூல் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவு தொகை கொடுத்து செல்லக்கூடிய அளவிற்கு இந்த பூங்காவில் குழந்தைகள் பார்த்து ரசிக்கக்கூடிய, பொழுதுப்போக்குக்கூடிய வசதிகள் இல்லை. உடைந்த ஊஞ்சல்கள், செயல் இழந்த இசை நீரூற்றுகள், பூங்காவின் அழகை கெடுக்கிறது. பேவர் பிளாக் கற்கள் உடைந்த நடைபாதைகள், அடர்வனம்போல் பராமரிப்பதற்காக விடப்பட்ட காலிஇடங்களில் புதர் மண்டி கிடப்பது, பூங்காவினுள் நுழைந்ததும் எதற்கு வந்தோம் என்ற சலிப்பை ஏற்படுத்துகிறது. இலவசமாக விளையாடக்கூடிய ஊஞ்சல்கள், சறுக்குகள், இசை நீரூற்றுகள் செயல்படுத்த அக்கறை காட்டப்படவில்லை.

இசைநீருற்றுகள் பழுதடைந்து 10 ஆண்டிற்கு மேல் ஆகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் டெண்டர் எடுப்பவர்கள், அதனை சீரமைப்பது இல்லை. அதில், விஷச்செடிகள், முட்புதர்கள் நிறைந்து பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. குழந்தைகளுக்கான புகைவண்டி செல்லும் வழித்தடம் பராமரிப்பு இல்லாமல் புற்கள், ஆளுயுர புதராக உள்ளன. இந்த புகை வண்டி வந்து நிற்கும் ரயில்நிலையம் மேற்கூரை விரிசல் விட்டு சுவர்கள் உடைந்தும் சிதைந்தும் எந்தநேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. உடைந்த டிக்கி ட்ரெயின், கொலம்பஸ் படகு ஊஞ்சல் போன்றவை பயன்பயன்பாடு இல்லாமல் உள்ளது.

சறுக்கு விளையாட்டு உபகரணங்களில் உள்ள கம்பிகள் உடைந்தும் துருப்பிடித்தும் உள்ளன. அதில் கவனக்குறைவாக விளையாடும் குழந்தைகள் உடலில் காயங்களை ஏற்படுத்துகின்றன. செயற்கை பலூன் படகு குழாமில், உள்ள தண்ணீர் நிறம்மாறி தூர்நாற்றம் வீசுகிறது. அதனால், குழந்தைகளை பெற்றோர்கள் அதில் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும், ஏற்கெனவே ரூ.10, ரூ.20 கட்டணம் கொடுத்து உள்ளே செல்லும் பொதுமக்கள், குழந்தைகள், பொழுதுப்போக்குவதற்கு ஒவ்வொரு விளையாட்டுகளையும் விளையாடுவற்கு தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டிய உள்ளது.

குழந்தைகள், மக்கள் அமரக்கூடிய இருக்கைகள் உடைந்து காணப்படுவதால் மண் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது. பூங்காவில் உள்ள ஸ்நாக்ஸ் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம், பாப்கான், பஜ்ஜி போன்றவை விலை அதிகமாக உள்ளன. அதனால், பட்ஜெட் பொழுதுப்போக்கு இடமாக இந்த ராஜாஜி பூங்கா, வசதிப்படைத்தவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியுள்ளது. முன்பு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். தற்போது சனிக்கிழமை 400 பேரும், ஞாயிற்றுக்கிழமை 700 முதல் 800 பேரும் வந்து செல்கின்றனர். இதில் காதல் ஜோடிகள்தான், அதிகளவு வந்து செல்கிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மாநராட்சிக்கு ஆண்டிற்கு ரூ.1 1/4 கோடி முதல் ரூ.1.37 கோடி வரை வருவாய் ஈட்டிக் கொடுக்கும் இந்த ராஜாஜி பூங்கா, தற்போது பொலிவிழந்து பொழுதுப்போக்கு அந்தஸ்தை இழந்துள்ளது. 3 ஆண்டு ஒரு முறை தனியார் நிறுவனத்திற்கு இந்த பூங்கா குத்தகைக்கு விடப்படுகிறது. அவர்கள், மாநகராட்சிக்கு முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு புதுப்பித்தல் தொகை, மூன்றாம் ஆண்டு புதுப்பித்தல் தொகை செலுத்துகின்றனர். ஆனால், அவர்கள் பூங்காவை பராமரிப்பது இல்லை. இருக்கிற வசதிகளையும், கடைகளை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கின்றனர்.

இந்த பூங்கா, ஆளும்கட்சிக்கு நெருக்கமான எம்எல்ஏ உறவினர் ஒருவர் டெண்டர் எடுத்துள்ளார். அதில், எம்எல்ஏ-வின் தலையீடும், முட்டுக்கட்டையும் உள்ளதால் மாநகராட்சியால் இந்த பூங்காவை ஆய்வு செய்யக்கூட முடியவில்லை. மாநகராட்சி நேரடியாக இந்த பூங்காவை ஏற்று நடத்தாததின் விளைவு, தற்போது ராஜாஜி பூங்கா, காதலர்கள் புகலிடமாகவும், புதர்மண்டி பாம்புகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் மிகுந்த இடமாகவும் உள்ளது. 2025ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதியுடன் இந்த பூங்காவின் உரிமை காலம் முடிகிறது. அதன்பிறகுதான் மாநகராட்சியால் இந்த பூங்காவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,” என்றனர்.

சிசிடிவி-காமிரா பொருத்தப்படுமா? – பொதுமக்கள் கூறுகையில், ”பூங்காவிற்குள் வரக்கூடியவர்கள், குழந்தைகளுடன் 2 முதல் 3 மணி வரை சுற்றிப் பார்க்கின்றனர். டிக்கெட் எடுத்து வரக்கூடிய அவர்கள், கழிப்பிடம் செல்வதற்காக வெளியே செல்ல முடியாது.ஆனால், பூங்கா கழிப்பறைகளில் கழிவு நீர் தேங்கி, பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தூர்நாற்றம் வீசுகிறது. மீறி பயன்படுத்தால் தொற்று நோய் வரும் அபாயம் உள்ளது. நுழைவு வாயில், டிக்கெட் கவுன்ட்டர் தவிர மற்ற இடுங்களில் சிசிடிவி காமிராக்கள் இல்லை.

பூங்காவில் உள்ள ஒவ்வொரு மரங்களும் பராமரிப்பு இல்லாமல் மழைக்கும், காற்றுக்கும்ஒடிந்து கீழே விழுகிறது. அதனால், அடர் வனம் போல் காணப்பட்ட ராஜாஜி பூங்கா மரங்கள் அடர்த்தி குறைந்து வெட்டவெளியாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனால், பூங்கா வளாகத்தில் குளிர்ந்த சீதோஷனநிலை குறைந்து, மக்களுக்கு வெப்பமும், வெயிலும் அதிகரித்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்களால் நீண்ட நேரம் பூங்காவில் செலவிடமுடியடிவில்லை,” என்றனர்.