கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் உறுப்பு நாடுகள் கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் செயலகத்தினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சாசனத்தில் 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன.
குறித்த கைச்சாத்திடும் நிகழ்வுகள் இலங்கை அரசாங்கத்தால் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , கே.சி, மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு இப்ராஹிம் லத்தீப் DC (Retd.), Lt. Col (Retd.) மொரீசியஸ் குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஹய்மந்தோயல் திலும் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கா ஆகியோர் குறித்த உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆவணங்களில் கைச்சாத்திட்டிருந்தனர்.
உறுப்பு நாடுகளின் பொதுவான கவலைகள் குறித்த சவால்கள் மற்றும் நாடுகடந்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை முறியடித்து பிராந்திய பாதுகாப்பினை மேம்படுத்துவதே இந்த கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் முக்கிய இலக்காகும்.
கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான ஐந்து முக்கிய காரணிகளாக கடல்சார் பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத ஒழிப்பு, கடத்தல்கள் மற்றும் திட்டமிட்ட பல்தேசிய குற்றங்களுக்கு எதிராக போராடுதல், இணைய பாதுகாப்பு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு, மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
இக்கூட்டுக்குழுமத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட தூதுக்குழுவினரது தலைவர்கள் மட்டத்திலான கலந்துரையாடல்களுடன் இந்நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.
இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட CSC உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை சந்தித்துள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.