‘மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே’ – மன்னாரில் போராட்டம்

62 0

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலையை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இப் போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில்

‘வர்த்தகம் முக்கியத்துவம் கொண்ட மன்னார் தலைமன்னார் சர்வதேச நெடுஞ்சாலையில் மதுக்கடையா?’, ‘மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே’, ‘மக்கள் வாழ்விடத்தில் மதுபானசாலையா? ஏழை மக்களின் வாழ்க்கையில் விலையாடாதே’, ‘பாடசாலை மாணவர்களை போதைக்குள் தள்ளாதே’, ‘அதிகாரிகளே மதுபானக் கடைக்கு அனுமதி வழங்காதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை எந்தியிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின் கோரிக்கைகள் கொண்ட மகஜர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளரிடமும் நேரில் சென்று கையளிக்கப்பட்டன.