இந்தியர்களை நிறவெறி ரீதியாக விமர்சித்த ‘Barry Stanton’ எக்ஸ் தள கணக்கு முடக்கம்!

41 0

எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியர்களை இனவெறி ரீதியாக விமர்சித்த ‘Barry Stanton’ என்ற எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டது.

@barrystantonGBP என்ற எக்ஸ் தள கணக்கில் இந்தியர்களை இனவெறி ரீதியாக சாடும் ட்வீட்டுகள் வைரலாகின. இதைக்கண்டு கொதிப்படைந்த இந்தியாவை சேர்ந்த எக்ஸ் தள பயனர்கள், சம்பந்தப்பட்ட கணக்கை முடக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது தொடர்பாக எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்குக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்த சூழலில் அந்த கணக்கு முடக்கப்பட்டது. விதிமுறைகளை மீறியது இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பலரும் #Suspended என எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்தனர். எக்ஸ் தளத்தில் வெரிஃபை செய்யப்பட்ட கணக்காக Barry Stanton கணக்கு உள்ளது. சுமார் 1.5 லட்சம் பயனர்கள் இந்த கணக்கை பின்தொடர்கின்றனர். இந்தியர்களை இனவெறி ரீதியாக விமர்சிக்கும் கேலிச்சித்திரம் மற்றும் மீம்கள் இதில் பகிரப்பட்டன. வெள்ளையர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து இந்தியர்களை எப்படி விரட்டுவது என்ற பதிவையும் இந்த கணக்கு புகழ்ந்தது. யூதர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களையும் கடுமையாக இனவெறி ரீதியாக இதில் விமர்சிக்கப்பட்டது.

இனம் மற்றும் தேசத்தின் அடிப்படையில் தனிநபர்களை குறிவைத்து வெறுப்பு பேச்சு மற்றும் மனம் புண்படும் வகையிலான கருத்துகள் இந்த கணக்கில் பகிரப்பட்டதாக பிரிட்டன் வாழ் இந்தியர்கள் பலரும் தெரிவித்தனர். இது தொடர்பாக சிலர் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பிரிட்டனில் உள்ள இந்திய உயர் கமிஷனுக்கும் தெரிவித்தனர்.

Barry Stanton? – இந்த கணக்கின் எக்ஸ் பயோவில் தான் ஒரு பிரிட்டிஷ்காரர் மற்றும் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை என தெரிவித்துள்ளார். மேலும், அந்த எக்ஸ் கணக்கில் இடம்பெற்றுள்ள படம் சம்பந்தப்பட்ட நபருடையது அல்ல என்பதை பிரிட்டன் நாட்டு வலைதளம் ஒன்று உறுதி செய்துள்ளது. பல ஆண்டுகளாக இதில் வெறுப்பை பரப்பும் விதமான கன்டென்ட் மட்டுமே பரப்பப்பட்டு வந்துள்ளது. அதன் மூலம் லைக்ஸ், ரீட்வீட்ஸ்களும் அதிகம் பெற்றுள்ளது. இது பகடி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட கணக்காக கூட இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.