அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று (ஆக.30) ஆஜரானார்.
புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் போது விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக 2-வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரன்ட் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று புதுவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.