வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தடைகோரி நீதிமன்றை நாடிய பொலிஸார் – கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

87 0

இன்று வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை அடையாளப்படுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றில்  விடுத்த வேண்டுகோளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.

இந்த தடையுத்தரவு விண்ணப்பத்திற்கான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (29)  யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வேளையிலேயே நீதிமன்றம் பொலிஸார் செய்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது.

யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி இளங்கோதைக்கும் அவரோடு இணைந்தவர்களுக்கு எதிராகவும் இந்த தடையுத்தரவு வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றை நாடிய நிலையில் நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு நியாயங்களை முன்வைக்குமாறு யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி இளங்கோதைக்கு யாழ் நீதவான் நீதிமன்று  அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இதற்கு அமைவாக நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில்  யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி உள்ளிட்டவர்கள் ஆஜராகி தமது போராட்டத்தின் நியாயப்பாட்டையும் தமக்குள்ள உரிமையையும் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தடைகோரி விண்ணப்பம் செய்த பொலிஸார் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் பிரிவு 69 கீழாக   தற்போது தேர்தல் காலமாக இருப்பதனால் வேட்பு மனு தாக்கல் செய்த காலத்திலிருந்து தேர்தல் முடியும் வரையிலான காலம் வரையில் பேரணிகள் ஊர்வலங்களை செய்யமுடியாது என்றும் மற்றும் தேர்தல் காலமாக இருப்பதால் இந்த பேரணிக்கு பாதுகாப்பு வழங்க உரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமல் இருப்பதனாலும் தற்போது நல்லூர் உற்சவ காலம் என்றபடியினாலும் இன்று வெள்ளிக்கிழமை (30) எதிர்கட்சி தலைவர் சஜித் பங்குபற்றும் கூட்டம் யாழில் இடம்பெறவுள்ளதாலும் மேலும் நடக்கவுள்ள இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரணியால் அரசியல் தலையீடுகள் நடைபெறலாம் எனவும் கலகங்கள் ஏற்படலாம் எனவும் குற்றம் ஒன்று நிகழலாம் என்றும் சமாதான குலைவான நிலைமை ஒன்று தோன்றலாம் என கோரி இந்த  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரணிக்கு தடைவிதிக்குமாறு மன்றில் தமது சமர்பணத்தை செய்தனர்.

பொலிஸாரின் இந்த விண்ணப்பத்துக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்ப்பில் மன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்த சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் அம்பிகா சிறீதரன் சட்டத்தரணி சங்கர் ஆகியோர் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் பிரிவு 69 கீழாக மூன்று விதமான ஊர்வலங்களை நடாத்துவதற்கு விதிவிலக்கு வழங்கப்டுள்ளதை சுட்டிக்காட்டி தமது சமர்பணங்களை செய்திருந்தனர்.

அதாவது , தேர்தல் அறிவிக்கப்படுள்ள காலங்களில் வருகின்ற மே 01 ஆம் திகதி வருகின்ற தொழிலாளர் பேரணி மற்றும் சமய சம்மந்தமான ஊர்வலங்கள் பொது நோக்குடன் சமூக நோக்கத்திலான ஊர்வலங்கள் செய்ய முடியும் என்றும் இன்று ஆகஸ்ட் 30 நடைபெறவுள்ள பேரணி சமூக நோக்கத்திலான பொது விடயம் என்றும் இதற்கு எதிராக பொலிஸார் தடையுத்தரவு கோரா முடியாது என்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை அடிப்படை அரசியல் உரிமை என்றும் இதனை அனுபவிப்பதை பொலிஸார் தடை செய்ய முடியாது என்றும் அத்தோடு உற்சவம் நடைபெறுகிறது என்பதை காரணம் காட்டியோ அரசியல் கட்சி ஒன்றின் கூட்டம் ஒன்று இடம்பெறுகின்றது என்பதை காரணம் காட்டியோ அல்லது எதிர்காலத்தில் குற்றம் ஒன்று நிகழலாம் என்பதை காரணம் காட்டியோ பொலிஸார் இந்த தடையுத்தரவு கோர முடியாது என வாதங்களை முன்வைத்தனர்.

இதனடிப்படையில் நீதவான் நீதிமன்று தனது கட்டளையில்  பொலிஸாரால் செய்யப்பட்ட தடையுத்தரவு கோரிய விண்ணப்பத்தை சாதகமாக பரிசீலிக்க முடியாது என்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் பிரிவு 69 A இன்  கீழாக  சமூக நோக்கத்திலான பேரணிகளை தடை செய்ய முடியாது என்றும் அதற்கு ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்படுள்ளது என்பதை சுட்டிக்காட்டியதோடு பேரணியை தடை செய்யக்கோரிய பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.

 

மிக நீண்ட நேரமாக இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மிகவும் சிறப்பான முறையில் தமது வாதங்களை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் நீதிகோரிய பேரணிக்கு சட்ட ரீதியிலான உரிமையை நீதிமன்றின் ஊடாக உறுதிப்படுத்தியிருந்தனர்.