வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் – உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

39 0

குஜராத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை (ஆக.26) 7 பேர் உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆக. 27) 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று (ஆக. 28) அதிகபட்சமாக 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 17,800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக வதோதராவில் ஆகஸ்ட் 28 வரை 12,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ராஜஸ்தானில் இருந்து சவுராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

 

இந்நிலையில், முதல்வர் பூபேந்திர படேல் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மூன்று நாட்களாக குஜராத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மீண்டும் ஒருமுறை என்னுடன் தொலைபேசியில் உரையாடி நிலைமையை அறிந்து கொண்டார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் அறிந்துகொண்டார்.

வதோதராவில் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கவலை தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் உதவிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்கும் என்று மீண்டும் உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.