சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

34 0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவர் பதவிக்கான நியமனம் தொடர்பாக முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபி-யை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையாக காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் முறைகேடுகள் எதுவும் நிகழும்பட்சத்தில் அவர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் நலனை கருத்தில் கொள்ளமால் உள்நோக்கத்தோடு இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சுனில்குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளார். அதற்கு பிரதிபலனாகவே தற்போது அவர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். எனவே, இடைக்கால நிவாரணமாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும். அத்துடன், எதன் அடிப்படையில் சுனில் குமார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.