மீண்டும் ஒரு கஷ்டமான யுகம் வந்தால் சஜித்தும் அனுரவும் ஓடிவிடுவார்கள்!

38 0

“இயலும் ஸ்ரீலங்கா” என்ற அரசியல் மேடையே நாட்டைக் காப்பாற்றும் மேடையாகும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய மேடையில் இருப்பவர்கள் மக்கள் இறந்தாலும், அரசியல் இலபாம் கிட்டினால் போதும் என்று நினைப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

தான் சொல்வதில் ஏதாவது தவறு இருந்தால் பதில் சொல்லுமாறும் சவால் விடுத்தார்.

நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நேற்று (28) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இதே இடத்தில் அரசியல் மேடையில் இதற்கு முன்னதாகவும் பேசியுள்ளேன். அப்போது இன்று என்னோடு இருக்கும் அமைச்சர்கள் இருந்த மேடையை விமர்ச்சித்துள்ளேன். அவர்ளும் என்னை விமர்ச்சித்துள்ளனர். இன்று நாங்கள் ஒரே மேடையில் இருக்கிறோம்.

அன்று இந்நாட்டு ரூபாவின் பெறுமதி 50 சதவீத்தினால் குறைந்துள்ளது. அதற்கு தீர்வு தேடுவதா இல்லாவிட்டால் பிரச்சினையை சாடிக்கொண்டிருப்பதா என்ற கேள்வி இருந்தது. நாட்டில் கேஸ், உணவு, மருந்து இல்லாத வேளையில் நாம் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதையே நாங்கள் சிந்தித்தோம். அதற்கு தீர்வுத் தேட என்னோடு வந்தவர்கள் இன்றும் எனது மேடையில் இருக்கின்றனர்.

எம்மை விமர்ச்சிபவர்கள் அன்று என்ன செய்தனர். அவர்களின் விமர்சனங்கள் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தந்ததா? மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நாட்டு மக்கள் வழங்கிய பொறுப்பை ஏற்க முடியாமல் ஓடினர். சஜித்துக்கும் அனுரவுக்கும் அன்று அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அன்று மக்கள் இறந்தாலும் தமது அரசியல் இலாபமே முக்கியம் என்று நினைத்தவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா விதமான மக்களும் சமூகமாக என்னோடு இணைந்துள்ளனர். எதிர்கட்சியினர் அன்று எதற்காக பொறுப்பை ஏற்க மறுத்தனர்? அன்று மக்களை பற்றி சிந்திக்காத தலைவர் இன்று அதிகாரத்தை கோருகிறார். நாட்டில் பிரச்சினை வந்தால் கட்டுநாயக்கவிற்கு ஓடி விமானத்தில் பறந்துவிடுவார். கஷ்ட காலத்தில் எந்த ஜனாதிபதி மக்களோடு இருப்பார் என்று சிந்தியுங்கள். அன்று இல்லாதவர்கள் இன்று வந்து புத்தகம் படித்து காட்டுவதில் அர்த்தமில்லை.

2022 இல் மொத்த தேசிய உற்பத்தி 15 சதவீதத்தினால் குறைந்தது. ரூபாவின் பெறுமதியும் குறைந்தது. அதனால் பொருட்களின் விலை அதிகரித்தது. வாழ்க்கை சவாலாக மாறியது. இன்றும் பிரச்சினைகள் உள்ளன. ஒரு வருடத்தில் முடிந்த சலுகையை தந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு தந்த வாய்ப்பை பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி ரூபாவின் பெறுமதியை பலப்படுத்த வழி செய்தேன்.

இலங்கைகுள்ளேயே பணத்தை தேடினோம். விருப்பமின்றியேனும் மருந்து குடிப்பது போல கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். மக்கள் எம்மை திட்டித் தீர்த்தனர். ஆனால் நாம் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தோம். வரி சேகரிக்க ஆரம்பித்தோம் ரூபாயின் பெறுமதியும் வலுவடைந்தது அதன் பலனாக கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பருப்பு விலை குறைந்துள்ளது. பஸ் கட்டணமும் குறைந்திருக்கிறது.

இவற்றை செய்யாவிட்டால் நாமும் கிரீஸின் நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். ஆனால் கிரீஸை போல நெருகடி வந்த காலத்தில் நான் எந்தவொரு அரச ஊழியரையும் பணி நீக்கவில்லை. அவர்களையும் பாதுகாக்கவே வழி செய்தேன். இன்று கிரீஸ் பற்றி பேசுவோர் அன்று ஒலிம்பிக் ஆரம்பித்த கிரீஸூக்கே ஓடி மறைந்தனர். ஆனால் பேய்களை கண்டு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை. ஜே.ஆர் ஜயவர்தனவிடமே பாடத்தைக் கற்றேன். செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளத்தை அதிகரித்தோம். அடுத்த வருடத்திலும் உதய செனவிரத்ன அறிக்கையின் பிரகாரம் சம்பள அதிகரிப்புச் செய்ய தீர்மானித்திருக்கிறோம். அதனால் வாழ்வாதாரச் செலவை அதிகரிப்போம். வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி வரம்பை குறைத்திருக்கிறோம்.

மக்கள் வாழ்வாதாரத்துக்கான சலுகைகளை வழங்குவோம். இன்று நாட்டில் 5 விளைச்சல்கள் சாத்தியமாக செய்யப்பட்டுள்ளன. மேலும் பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. புதிய தொழில்களையும் அதிக சம்பளம் ஈட்டும் தொழில்களையும் உருவாக்க வேண்டியுள்ளது. நிலையான பொருளாதாரமே எமது இலக்காகும். 24 மணித்தியாலங்களில் அவை அனைத்தையும் செய்ய முடியாது.

தற்போது பயணிக்கும் பாதையை மாற்றவும் முடியாது. மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய மக்கள் சக்தியும் வரியை குறைப்பதாகச் சொல்கிறார்கள். நிவாரணம் வழங்குவதாக கூறுவதை பார்க்கையில் எதிர்கட்சியினருக்கு எண் கணிதம் கூட தெரியாது என்பது புரிகிறது. எந்நாளும் இதே பொய்களையே சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. அப்படிச் செய்வதால் நாடு சரிவடைவது மட்டுமே நடக்கும்.

நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. யானைக்கோ கதிரைக்கோ கை சின்னத்துக்கோ மொட்டுக்கோ வாக்களிக்கவில்லை. உங்கள் சமையலறைக்கே வாக்களிக்க போகிறீர்கள். உங்கள் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்காக சிலிண்டருக்கு வாக்களியுங்கள். டெலிபோனும், திசைக்காட்டியும் பழைய சின்னங்கள். சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இல்லை என்று என்னை திட்டித்தீர்க்காதீர்கள்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன,

“ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் நாட்டு மக்கள் மூச்சுவிடும் நிலைமையை உருவாக்கியுள்ளது. அந்த ஒப்பந்தத்தை அடுத்த மூன்று வருடங்களும் சரியான முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். அரச ஊழியர்கள் கொடுப்பனவு, அபிவிருத்தி பணிகள் என்பவற்றை உள்ளடக்கியே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்க வேண்டியுள்ளது.

அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தில் 5018 பில்லியன் ரூபா துண்டு விழும் தொகையாக காணப்படும். 666 பில்லியன் ரூபா தேடிக்கொள்வதற்கான வழிமுறையை தற்போதும் ஜனாதிபதி வழி தேடியுள்ளார். 700 பில்லியன்களை உலக வங்கி பெற்றுத்தரும். அவற்றை பெற்றுக்கொள்ளாமல் நாட்டு மக்களுக்கான எதிர்காலத்தை வடிவமைக்க எவராலும் முடியாது.

அதனை செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை மாற்றும் வகையில் 5 சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைகவேற்றப்பட்டுள்ளன. அந்த ஐந்து சட்டங்களும் நாட்டின் பாதுகாப்புக்கான பஞ்சாயுதமாகும்.” என்றார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

“இன்று ஜனாதிபதிக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் செல்ல முடியாமல் அஞ்சி ஓடினர். அப்படியிருந்த நாட்டில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்கியிருக்கிறோம். எதிர்கட்சியினர் மக்களிடத்தில் வெறுப்பை தூண்டுவதை மட்டுமே செய்தனர்.

இரண்டு வருடங்கள் நாட்டு மாணவர்களின் கல்வி வாழ்க்கை கேள்விக்குறியானது. மே மாதத்தில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனால் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும்.

எனவே நாடு மீண்டும் நெருக்கடிக்குள் விழுந்து பூச்சியமாவதை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

முன்னாள் அமைச்சர் ரவீ கருணாநாயக்க,

“வரிசை யுகம் வேண்டுமா? நாட்டில் தற்போதிருக்கும் நிலையை பாதுகாப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீயில் எரிந்ததையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார்.

எதிர்தரப்பு வேட்பாளர்களில் ஒருவர் நாட்டின் வருமானத்தை குறைக்க எதிர்பார்க்கிறார். மற்றையவர் செலவீனங்களை அதிகரிக்க முயற்சிக்கிறார். வற் வரியை குறைத்தால் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படும். 2022 ஆம் ஆண்டிலும் அதுவே நடந்தது.

பொருளாதார அறிவின்றி நாட்டைநெருக்கடிக்குள் தள்ளிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த,

“பங்களாதேஷ், மாலைத்தீவு போன்ற நாடுகள் இன்று நெருக்கடிக்குள் விழுந்துள்ளனர். நெருக்கடி காலத்தில் இலங்கையின் ஆட்சியை ஏற்பவர்களை கடவுளே காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன எதிர்கட்சியினர் இன்று போட்டியிட வந்திருப்பது வேடிக்கையானது.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி சம்பள அதிகரிப்பு வழங்குவதாக சொன்னவுடன் சஜித் பிரேமதாசவும் 20 ஆயிரம் ரூபா தருவதாக சொல்கிறார். ஆனால் அதனை செய்யும் முறைமை அவருக்கு தெரியாது. அதேபோல் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றப்போவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அதுவும் நாட்டுக்கு மிகவும் பாதகமான முயற்சியாகும்.

தனி ஒருவராக நாட்டை வழிநடத்தும் அதேநேரம் சர்வதேசத்தில் இராஜதந்திரிகளுக்கும் ஈடுக்கொடுக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளார்.” என்றார்.