தனிநபர் வருமானத்தை 20 ஆயிரம் டொலராக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

21 0

2048ஆம் ஆண்டுக்குள் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பவும் தனிநபர் வருமானத்தை 20,000 டொலராக அதிகரிக்கவும் அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க்கும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற கலால் வரி கட்டளைச் சட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியன தொடர்பான கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய மேற்படி வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது.  சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அனைத்து அரசாங்க சேவைக்கும் நன்மை கிட்டும் வகையில் தீர்மானங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் என்ற வகையில் டாக்டர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு இடைக்கால கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. அரசாங்க சேவையில் நிலவும் இந்த சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அந்த குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும் போது அரசாங்க சேவையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் சம்பளமும் 55 ஆயிரம் ரூபாவாக அமையும். அந்த வகையில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இவ்வாறு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் இல்லாத வகையில் அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் யோசனைகளை அரசாங்கம் முன் வைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக செயற்பட்டு நிரந்தரமாக நாட்டை அழிவுக்குள் உட்படுத்த வேண்டாம் என்றார்.