போரும் பேச்சுவார்த்தையும் பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாத காலமாக நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் இருந்துவந்தபோதும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான போர் மூண்டுள்ளது. தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும் இதுவரை இஸ்ரேல் எதற்கும் பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தது.
இஸ்ரேலுக்கு உதவும் விதமாக ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் அமெரிக்கா தந்து கொண்டிருந்தாலும், விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பெருமுயற்சி எடுத்து வருகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டும் நிலையில் உள்ளது என்று கடந்த வாரம் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
பாதியில் நின்ற பேச்சுவார்த்தை கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த வாரம் நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்திருந்தது.அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா – ஆண்டனி பிளிங்கன் பயணம் ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட அமெரிக்கா தயாராக இல்லை. எனவே அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் போர் தொடங்கியதிலிருந்து 9 வது முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் நெதன்யாகுவுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய அவர் தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே தற்போது முடிவு ஹமாஸ் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டனி பிளிங்கன் வருகையும் அவருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நல்ல முறையில் அமைந்ததாகவும், முக்கியமான ஒன்று என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியே – ஹிஸ்புல்லா காரணிகள் ஆனால் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க முடிகிறது.
ஹனியே கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஆனால் மேற்கு நாடுகள் ஈரான் அதிபரை எச்சரித்து வருகின்றனர். ஹெஸ்புல்லா நிலை கொண்டுள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தி வருவதும் நிலைமையை மோசமாகியுள்ளது.
நேற்று லெபனானின் ஹிஸ்புல்லா ஆதிக்க பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த புறக் காரணிகள் பாலஸ்தீன போர் நிறுத்தத்தைத் தாமதமாக்கி வருகிறது. ஹமாஸ் திட்டவட்டம் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தன்,ஆண்டனி ப்லிங்கின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது என்றும் கூறியுள்ளது தெளிவற்றதாக உள்ளது.
ஏனெனில் அது குறித்து எங்களிடம் எந்த தகவலும் கூறப்படவில்லை. நாங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு இசைவு தெரிவிக்கவும் இல்லை . இந்த ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று மத்தியஸ்தர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். எங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவையில்லை.
[பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆதிக்கம் இல்லாத] புதிய கட்டமைப்பை உருவாக்கினால் அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆண்டனி பிளிங்கன் அடுத்ததாக மத்தியஸ்த நாடுகளான எகிப்து மற்றும் கத்தாருக்கு பயணம் மேற்கொள்கிறார்.