கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி: வானதி சீனிவாசன்

44 0

 கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி வழங்க தமிழக முதல்வர் முடிவெடுத்துள்ளதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் நன்றி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (ஆக.20) சந்தித்து பேசினார். தனது சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் புகைப்படத்துடன் செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னையில் முதல்வர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகள் பேராசிரியர் கனகசபாபதி, சுமதி வெங்கட் ஆகியோருடன் சந்தித்து பேசினேன். அப்போது கோவை மக்களின் தேவைகளை நிறைவேற்றகோரி மனு அளித்தேன்.

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும், நகர்புற வளர்ச்சி ஆணையம் அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த வேண்டும். காந்திபுரம், டவுன்ஹால், ராஜவீதி பகுதிகளில் பல்லடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி மத்திய அரசுக்கு வழங்கும் தமிழக முதல்வரின் முடிவுக்கு நன்றி தெரிவித்தேன், என்று அதில் பதிவிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு முன்னாள் எம்.பி கண்டனம்: கோவை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்ற வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சர்வதேச விமானங்கள் கூடுதலாக இயக்க விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரூ. 2,100 கோடி ஒதுக்கீடு செய்த நிலத்தை ஆர்ஜிதம் செய்துள்ளது. அவற்றை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. திமுக அரசு ஏற்கெனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.