ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி இருக்கும் தேர்தல் சின்னம் சட்ட விரோத செயலாகும்!

24 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையில் அந்த தேர்தலில் ஒரு குழுவுக்கு வழங்கிய தேர்தல் சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் வேறு ஒரு நபருக்கு வழங்குவது சட்டவிராேதமாகும். என்றாலும் தேர்தல் ஆணைக்குழு அதனை செய்திருக்கிறது என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் தேர்தல் முடிவடையவில்லை. இந்நிலையில் உள்ளூைராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் குழுவொன்றுக்கு எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வழங்கி இருக்கிறது. இது சட்டவிராேத செயலாகும்.

அதேநேரம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்திருந்தால், அந்த தேர்தலில் போட்டியிட்ட குழுவுக்கு வழங்கியிருந்த தேர்தல் சின்னத்தை இந்த தேர்தலில் வேறு வேட்பாளருக்கு வழங்குவதில் தவறு இல்லை. என்றாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முடிவடையவில்லை. அதனாலே ஒரு குழுவுக்கு வழங்கிய தேர்தல் சின்னத்தை வேறு ஒரு வேட்பாளருக்கு வழங்க முடியாது என்கிறோம்.

இதனை அடிப்படையாகக்கொண்டு தேர்தலை பிற்போடுவதற்கு முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு சில கருத்துக்களால் ஆணைக்குழு தொடர்பில் மக்களுக்கு இருந்துவந்த நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை. அவ்வாறு இல்லாமல், நீதிமன்ற தடை உத்தரவுகள் வராவிட்டால், தேர்தல் நடந்தே ஆகும் என தெரிவிப்பது, மக்களை குழப்பும் நடவடிக்கையாகும் என்றார்.