16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்துக்கு இரோம் சர்மிளா முற்றுப்புள்ளி

393 0

sharmila_2613967a_2947108fஆயுதப் படை சிறப்பதிகார சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இரும்புப் பெண் என்றழைக்கப்படும் இரோம் சர்மிளா (44). மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார்.

15 நாட்களுக்கு ஒரு முறை இம்பால் நீதிமன்றத்தில் இரோம் சர்மிளா ஆஜராகி கையெழுத்திடுவார். அதேபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனது முடிவு ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு புதிய விடியலை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் இரோம் சர்மிளா கூறினார்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உண்ணாவிரதப் போராட்டத்தால் மட்டுமே நீக்கிவிட முடியாது என அவர் தெரிவித்தார்.

சுயேச்சையாக போட்டி?

தேர்தலில் போட்டியிடப்போவதாக இரோம் சர்மிளா அறிவித்துள்ள நிலையில் அவர் சுயேச்சையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 ஆண்டு கால போராட்டம்:

அசாம், மணிப்பூர் உள்பட 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களை துன்புறுத்துவதால், உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும் என கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இரோம் சர்மிளா.

16 ஆண்டுகளாக அவரது போராட்டம் நீடித்து வருகிறது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரை தற்கொலைக்கு முயற்சிப்பதாக அவ்வப்போது அரசு கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் நடந்து வந்தது.

இந்நிலையில், தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடித்துக் கொள்வதாக இரோம் சர்மிளா அறிவித்துள்ளார்.