அதிகாரத்தை கைப்பற்றுவது நோக்கம் அல்ல!

15 0
சிறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய,  பொறுப்பேற்கின்ற, பொறுப்புக் கூறக்கூடிய  ஜனநாயக ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, ஆட்சி ஒன்றை  உருவாக்குவதே நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அரசியல் கட்சிகள், கலைஞர்கள், சிவில் அமைப்புகள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர், சமூக சேவையாளர்கள், மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டோர்களோடு ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

எமது நாட்டுக்கு கௌரவமான வரலாற்று பின்னணி ஒன்று இருந்தாலும் தற்பொழுது குழப்பமான சமூகக் கட்டமைப்பு ஒன்றே காணப்படுகின்றது. பலவிதமான பேரழிவுகளுக்குஉள்ளாகி தடைகள்,  மிரட்டல்கள், கர்ஜனைகள், துன்பங்கள்,   மற்றும் அழுத்தங்களுக்கு          மத்தியில்  வாழ்கின்றார்கள். பெரும்பாலானவர்களின் வாழ்க்கை சிரமத்துக்கு மத்தியில்  முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில்  ஜனநாயகத்திற்கு இடமளித்து அதனூடாக  பெறப்படுகின்ற மக்கள்வரத்துடன் தற்காலிக பாதுகாவலராக தரப்படுத்தப்பட்ட  ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மிக சுத்தமான ஜனநாயகவாதிகள் என  பட்டங்கள் கிடைத்தாலும் அதிகாரம் உள்ள இடங்களுக்கு பதிலாளர்களாக  பிரவேசிகின்ற போது அதிகார வெறி ஏற்படுகின்றது. அதன் காரணமாக  தரப்படுத்தப்பட்ட ஜனநாயக முறை   செயற்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அரசியல் ஜனநாயகத்தின் போது பொறுப்புக் கூறலை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். செலவழிக்கின்ற ஒவ்வொரு  சந்தர்ப்பத்தையும் நாட்டுக்கும் மக்களுக்கும்  இந்த சமூகத்துக்கும் பெறுமதியை சேர்ப்பதாக இருக்க வேண்டும். இதுதான்  ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதான நோக்கமாகும்.

மக்களின் ஆசீர்வாதத்தோடு அதிகாரம்  கிடைப்பது போன்று அதிகாரப் பேராசையில்,  அதன் பேரவாவில் அதனை உச்சகட்டத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

அதிகாரம் கிடைப்பது போன்று அதனைக் கைவிடவும் தயாராக இருக்க வேண்டும்.  ஐக்கிய மக்கள் சக்தியின் பயணப் பாதையில்  ஒருபோதும் குறுக்கு வழியில் அல்லது ஜனநாயகத்தை மீறுகின்ற விதத்திலோ  அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள  செயற்படவில்லை. அவ்வாறான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அதற்கு  இடமளிக்கவில்லை.

கொள்கை திட்டத்துடனான அரசியலின்  ஊடாகவே அதிகாரத்தை பெறுவது  உச்சகட்ட நோக்கமாகும். மக்கள் அபிப்பிராயத்திற்கு முதலிடம் கொடுத்து  உகந்த சேவையை மேற்கொள்வது அரச நிர்வாகத்தின் சிறந்த தன்மையாகும்.

இன்று நாட்டில் உள்ள அரசியல் யாப்பு  மீறப்படுகின்றது. ஜனநாயகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரதான தூண்களுக்கு இடையேயான தடைகள் மற்றும் சமன்பாடு தொடர்பாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை மீறப்பட்டு இருக்கிறது. ஜனநாயகமும் அரசியலமைப்பும்  முழுமையாக பலி எடுக்கப்பட்டு வருகின்ற  இந்த முறைமையை முற்றாக மாற்ற வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி, பொருளாதாரம் மேம்பாடு என்பனவற்றை கட்டியெழுப்புவது   எமது பிரதான நோக்கமாகும். இருவகையான பொருளாதார கோட்பாடுகள் இருக்கின்றது.  மோசமான வலதுசாரி முதலாளித்துவக் கொள்கையும், தீவிர இடதுசாரி  கொள்கையும் இருந்துள்ளது. இவை இரண்டும் அல்லாத நடுத்தர கோட்பாடு ஒன்றையே  ஐக்கிய மக்கள் கூட்டணி பின்பற்றுகிறது.  அரசாங்கத்தின் தலையீட்டை மையப்படுத்திய  இடதுசாரி கோட்பாட்டின் ஊடாக  மாத்திரம்  மூலதனத்தை ஈட்ட முடியாது. எமது நாட்டுக்கு சமூக சந்தைப் பொருளாதாரமும், சமூக ஜனநாயக கொள்கையைக் கொண்டமைந்த ஓர் பயணுமுமே எமக்கு தேவை.

அடிப்படை உரிமைகள் தொடர்பான  புதியதொரு வரையறைக்குள் செல்ல வேண்டும். அரசியல் மற்றும் சிவில் உரிமை போன்று பொருளாதார, சமூக கலாச்சார, மத, கல்வி, சுகாதார உரிமைகளும் அடிப்படை  உரிமைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.

2019 ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், எதிர்க்கட்சி என்ற வகையிலும் காத்திரமான பொறுப்புக்களை ஆற்றியுள்ளோம். பொறுப்புக்கள் இருந்திருக்கிறன. அதனை முறையாக நிலை நிறுத்தி இருக்கிறோம். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து  பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்துள்ளோம்.  அதன் ஊடாக பாராட்டே சட்டமூலத்தை  தற்காலிகமாக இடைநிறுத்த முடியுமாக இருந்தது. இதற்கு மேல் அதிகமாக பிரபஞ்சம்  மூச்சு போன்ற வேலை திட்டங்களையும்  முன்னெடுத்து இருக்கிறோம். இந்த நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு  எதிர்காலத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.