பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!

69 0
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 39 பேர் மாத்திரமே  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இதில் மூன்று தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தல் என்ற சாதனை பதிவாகியுள்ள அதே வேளை பெண் வேட்பாளர்கள் எவரும் இல்லாத ஜனாதிபதி தேர்தலாகவும் இது விளங்குகின்றது.

பாலின சமத்துவத்திற்கான சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையிலும் இலங்கை அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டும் வகையில், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்  பெண்கள் எவரும்  போட்டியிட முன்வரவில்லை. இதன் காரணமாக   ஆணாதிக்கம் நிறைந்த ஜனாதிபதி தேர்தல் என்றும் இதை வர்ணிக்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் நான்கு   பெண்கள் மாத்திரமே போட்டியிட்டுள்ளனர். இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்றபோது  சுதந்திர கட்சியின் சார்பாக அதன் தலைவர் சிறிமா பண்டாரநாயக்க போட்டியிட்டார். அத்தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றியீட்டினார்.  1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மறைந்த பிரபல அரசியல் பிரமுகர் காமினி திசாநாயக்கவின் மனைவியும் சந்திரிகா பண்டாரநாயக்க அம்மையாரும் போட்டியிட்டனர். நான்காவது  பெண்ணாக 2019 ஆம் ஆண்டு,  கல்வி புலத்தைச் சேர்ந்த அஜந்தா விஜேசிங்க பெரேரா போட்டியிட்டார். எனினும் இதில் சந்திரிகா அம்மையாரே இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட .பெண்ணாக விளங்குவதுடன் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் தக்க வைத்துக்கொண்டார். அவரது தாயார் சிறிமா பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை கொண்டிருக்கின்றார்.

1994 ஆம் ஆண்டு தேர்தல் மிக முக்கியமானதாக நோக்கப்படுவதற்குக் காரணம், அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளினதும் வேட்பாளர்கள் பெண்களாக இருந்தமையாகும். 1993 ஆம் ஆண்டு  அப்போதைய  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மே தினமன்று தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து    பிரதமர் டி.பி. விஜேதுங்க மிகுதி பதவி காலத்துக்கு ஜனாதிபதியாக செயற்பட்டார். எனினும்  அடுத்த தேர்தலில்  தான் போட்டியிடுவதில்லை  எனத் தீர்மானித்ததால், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான காமினி திசாநாயக்க வேட்பாளராக   தெரிவு செய்யப்பட்டார். எனினும் பிரசார நிகழ்வின் போது    திஸாநாயக்கவும் குண்டுத் தாக்குதலில் கொல்லப்படவே  அவரது மனைவியும் சட்டத்தரணியுமான   ஸ்ரீமா திசாநாயக்க  ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்க வேண்டியேற்பட்டது.  அங்கு அவர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்கொண்டார்.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது  ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இருபது வருடங்களுக்குப் பின்னரே அதாவது 2019 ஆம் ஆண்டே பெண் வேட்பாளர் ஒருவர் (அஜந்தா பெரேரா) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவானது. அதுவும் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 34 ஆண்கள் போட்டியிட ஒரே பெண் வேட்பாளராக அஜந்தா விளங்கினார்.

ஆனால் இந்த முறை சகலரும் ஆண்களாவே இருக்கின்றனர். இது ஒரு ஆணாதிக்க கலாசாரத்தையே பிரதிபலிக்கின்றது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய கூறுகிறார். அரசியலில் பெண்கள் முன்னிலை வகிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தேசிய கட்சிகளில் ஆண்களின் ஆதிக்கமே உள்ளது. ஆண் ஆதிக்க அரசியலே கொடி கட்டிப் பறக்கின்றது. முக்கியமாக 2005 ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்நிலை அதிகமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும்  நீக்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது, இது அரசியலில் பெண்களின் சம பங்களிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. இருப்பினும், நாட்டின் தற்போதைய அரசியல் யதார்த்தம் முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளதை அவதானிக்க முடிகின்றது என பெண்ணிலைவாதிகள்  கூறுகின்றனர்.  சட்டமானது  சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கினாலும், நடைமுறையில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இலங்கையில் தொடர்ந்தும் நடத்தப்படுகிறார்கள் என்பது வெள்ளிடை மலை.  சர்வதேச மகளிர் தினம், தாய்மார் தினம் மற்றும் பெண் பிள்ளைகள் தினம் போன்ற  நிகழ்வுகளில் மேடைகளில் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றாலும்  இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க மனப்பான்மை பெரும்பாலும் பெண்களை ஓரங்கட்டுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கை மொத்த சனத்தொகையில்  அரைவாசிக்கும் மேற்பட்டோர்  பெண்களாவர். ஆனால் அரசியல் பங்கேற்பில் அவர்களின் சதவீதம் மிக மிக பின்னடைவில் உள்ளது.    பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5.8% ஆக உள்ளது, மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் இல்லை.  அதேவேளை உள்ளூராட்சி சபைகளில் 1.9% மாத்திரமே உள்ளது. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை அரசியல் அல்லது செல்வாக்கான  பின்னணியுடனான பெண்  பிரதிநிதித்துவமே அதிகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சி.சிவகுமாரன்