முதல்வர் மம்தா நடவடிக்கையில் திருப்தி இல்லை: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கண்ணீர்

23 0
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போக்குவரத்து காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் இந்த விவகாரம் பெரிதானதால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் நேற்று முன்தினம் கூறியதாவது:

எனது மகளுக்கு நீதி வழங்குவது பற்றி முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகிறார், இது தொடர்பாக அவர்தெருவில் இறங்கி பேரணியும் சென்றார். ஆனால் நீதி கேட்டுபோராடும் சாமானிய மக்களை அவர் ஏன் சிறைக்கு அனுப்ப வேண்டும்? முதல்வரின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. மாநில அரசு எங்களுக்கு வழங்கிய இழப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டோம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எங்கள் மகளின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டதில் ஆதாரங்களை அழிக்கும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.

தகனம் செய்வதில் அவசரம்: தகன நிலையத்தில் 3 உடல்கள் இறுதிச் சடங்குக்காக காத்திருந்தன. ஆனால் அந்த உடல்களுக்கு முன்னதாகவே எங்கள் மகளின் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் எங்களால் சிந்திக்கவோ செயல்படவோ முடியாத நிலையில் இருந்தோம். ஒரே குழந்தையை இழந்ததால் மிகுந்த மனவேதனையிலும் அதிர்ச்சியிலும் இருந்தோம்.

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்கு மாநில போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் எதுவும் வெளிவரவில்லை. மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சை துறையில் இருந்தோ அல்லது கல்லூரியில் இருந்தோ யாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. எனது மகளின் கொலைக்கு ஒட்டுமொத்த துறையும் பொறுப்பு. குற்றத்தில் அந்த துறையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இந்த கடினமான காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கும் அனைவரையும் எங்கள் மகன்கள் மற்றும் மகள்களாக கருதுகிறோம். இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என நம்புகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்று சிபிஐ எங்களிடம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அந்த மருத்துவரின் பெற்றோர் கூறினர்.