பலத்த மழையினால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

13 0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் களுத்துறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 929 குடும்பங்களைச் சேர்ந்த 3,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையினால் இருவர் காயமடைந்துள்ளதுடன், 27 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மதுராவளை பிரதேச செயலகப் பிரிவில் வரகாகொட கலவெல்லவ வீதி, அலமோதர- பரகஸ்தோட்ட வீதி, மில்லனிய பிரதேச செயலகப் பிரிவின் பனாகொட- நர்துபான வீதி, புலத்சிங்கல- மொல்காவ வீதி, புலத்சிங்கல – மொல்காவ வீதி, புலத்சிங்கலத்தீ பிரிவின் செங்கலத்தலை வீதி, உப்பலத்தீவில் உள்ள பல வீதிகள் மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் பதுரலிய – பெனிகல வீதி ஆகியன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு அறிவித்தலைவெளியிட்டுள்ளது.

கொழும்பு, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பாதிக்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.