தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்தி திட்டங்களை முன்னெடுப்போம்

18 0

செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம். சுய நல தேவைகளுக்காக எம்மை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

திஸ்ஸமஹராம மகா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (18)  வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.சர்வமத வழிபாடுகளுடன் எமது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை நாளை மறுதினம் புதன்கிழமை அநுராதபுரம் நகரில் நடத்துவோம்.எமது வெற்றியில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பங்காளிகளாவர்.

செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.தேசிய உற்பத்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்போம். தனி நபரின் முன்னேற்றத்துடன் மாத்திரமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தங்களின் சுயநல தேவைகளுக்காக எம்மை விட்டுச் சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.நபர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யவில்லை.கொள்கையை முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபட்டுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் யார் யாருக்கு சவால் என்பது குறித்து கவனம் செலுத்துவதை விட நாடு எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். கொள்கை அடிப்படையில் எம்முடன் எவரும் கைகோர்க்கலாம் என்றார்.