தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம் செயற்படுத்தப்படுவதால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் சட்ட திட்டங்களை பின்பற்றி கெளரவமான முறையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தேர்தல் செலவு சட்டத்தை மீறி செயற்பட்டால் மூன்று வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாமல் போகும் என பெப்ரல் அமைப்பினர் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு வெள்ளிக்கிழமை (16) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் எந்தவகையிலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவகையில் தங்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதேபோன்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பிரசார நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறும் வாக்காளர்களை பணத்துக்கு வாங்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் எனவும் அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த தேர்தலில் முதற்தடவையாக தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் வேட்பாளர்களின் செலவு வரையறுக்கப்படும் சட்டத்துக்கு அமைவாக வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சட்டத்தை மீறி செயற்படும் வேட்பாளர்களின் பதவி இல்லாமல் போகும் நிலை இருக்கிறது.
அதேநேரம் யாராவது ஒரு வேட்பாளர் தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மீறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த வேட்பாளருக்கு மூன்று வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளராக இருக்க முடியாமல் நிலை இருக்கிறது. அதனால் தேர்தல் சட்ட திட்டங்களை பின்பற்றி கெளரவமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேட்பாளர்களை அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.