பூண்டுலோயாவில் தீ பரவல் – 28 வீடுகள் தீக்கரை

18 0

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் பழைய தோட்டம் என்றழைக்கப்படும் சீன் லோவர் பூண்டுலோயா தோட்டத்தில் நேற்றிரவு (16) 08 மணியலவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 28 வீடுகளை கொண்ட இலக்கம் (01) தொடர் குடியிருப்பு லயத்தில் 25 வீடுகள் எரிந்து தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் தீவிபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் நிர்கதிக்குள்ளான நிலையில் அவர்கள் அத்தோட்ட ஆலய மண்டபம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் இந்த சம்பவத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளான இரு வயோதிபர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் வீடுகளை இழந்துள்ள மூன்று கர்பிணி தாய்மார்கள் உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளத்துடன் இதற்கான காரணம் மற்றும் சேத விபரங்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

அதேநேரம் இந்த தீ பிடிப்பு சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சீன் தோட்டத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இளைஞர்கள் போராடியுள்ள போதிலும் பயனளிக்கவில்லை எனவும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் வருகைதந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உடன் தேவைகளுக்கான வசதிகளும், நிதி உதவியும் செய்து சென்றதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.