நாட்டின் 78-வது சுதந்திர தினத்தைஉலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில், அந்நாட்டு தூதர்கள் தேசியக் கொடியை ஏற்றி தேச பக்தி நிகழ்ச்சிகளை நடத்தினர்.
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் பிரதீப் குமார் ராவத் தேசியக் கொடியை ஏற்றினார். இதில் அங்குள்ள இந்தியர்கள் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கத்தை வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்கள் வாசித்தனர். பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் உட்பட சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு நாடகங்களையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பார்வையிட்டனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்திய தூதர் சந்தோஷ் ஜா தேசியக் கொடியை ஏற்றினார்.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்று சுதந்திரம் மற்றும் நாட்டுப்பற்றின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தில் இருந்து வந்த கலைக்குழுவினர் பிகு நடனம் ஆடினர். இலங்கை கடற்படையின் பேண்ட் குழுவினர் வந்தே மாதரம் உட்பட பல தேசபக்தி பாடல்களை இசைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்பாக இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில், இலங்கையின் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக உயிரிழந்த இந்தியவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் பிரனாய் வர்மா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, குடியரசத் தலைவரின் உரையின் சுருக்கத்தை வாசித்தார். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் முனு மகாவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் சில்பக் அம்புலே தேசியக் கொடியை ஏற்றினார். அங்குள்ள இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேசபக்தி பாடல்களை பாடி நடனம் ஆடினர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் கோபால் பக்லே தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகளை நட்டார். அங்குள்ள ஏடிசிஎஸ் தமிழ் பள்ளி மாணவர்கள் தமிழில் தேசபக்தி பாடல்களை பாடினர். வயலின் மற்றும் கீ போர்டு மூலம் இசைக் கச்சேரிகளும் நடத்தப்பட்டன. பிஜி தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் கார்த்தியேகேயன் கொடியேற்றினார். அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு தூதரக அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மரக் கன்றுகளையும் நட்டனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்திலும் சுதந்திர தின நிகழ்ச்சி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் நகேஷ் சிங் கொடியேற்றினர். இந்நிகழ்ச்சியில் இந்தியர்கள் 500 பேர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சியில் இந்திய குழந்தைகள் தேசபக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர். நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் நீட்டா பூஷன்கொடியேற்றினார். கம்போடியாவில் இந்திய தூதர் தேவயானி கோப்ரகேட் தேசியக் கொடியை ஏற்றினார்.