“பாமகவை ஆதரித்தால் பட்டியலின சமூகத்தவரை முதல்வர் ஆக்குவோம்” – அன்புமணி உறுதி

25 0

பாமகவுக்கு ஆதரவளித்தால் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம்,” என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி அளித்துள்ளார்.

திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் காசிநாதன் தலைமையில் இன்று (ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பிரம்மதேசத்தில் செயல்படும் மதுக்கடையை மூடுவதற்கும், மரக்காணம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டுள்ளதை திண்டிவனம் தாலுக்காவுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள், கல்லீரல் பிரச்சினை, தற்கொலை நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆட்சிக்கு வரும் முன் ஆட்சியாளர்கள் நிறைய வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதனையும் கண்டு கொள்வதில்லை.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது. ஆனால் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரமாகும். சொந்த கிராமத்துக்கு வந்து கிராம சபையில் பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறைகள் மதுவினால் அடிமையாகியுள்ளது. கஞ்சா – போதைப் பொருட்களை கட்டுபடுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன். மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுபடுத்த நடவடிக்கை இல்லை.

தயவுசெய்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும் போது, இவருக்கு இல்லை என பொய் கூறி கொண்டுள்ளார். மதுக்கடைகளை மூடுவதற்கு ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும். தேர்தல் அரசியலை மட்டும் பார்க்க கூடாது.

தமிழகத்தில் பட்டியலின சமூதாயம் பாமகவுக்கு ஆதரவு கொடுத்தால் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக ஆக்குவோம். ஏற்கெனவே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 1998-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பாமகதான். திமுக 1999-ம் ஆண்டுதான் பட்டியலின சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. அரசியல் காரணத்துக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளனர்,” என்று அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ், நிர்வாகிகள் பரசுராமன், பிரபு, குமரன், சம்பத், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.