சங்கராபுரம் அருகே ரேணுகா என்ற திருநங்கை வீட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சங்கராபுரம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை ரேணுகா. இவர் தனது வீட்டுக்கு செல்லும் சாலை பாதை மற்றும் 10 சென்ட் வீட்டு மனை பட்டா இடத்தை கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அபகரித்து வருவதாக கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சங்கராபுரம் வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரேணுகா மற்றும் சக திருநங்கைகள் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு, மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சலசலப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த திருநங்கை ரேணுகா மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் சுமூகம் முடிவு எட்டப்படாததால் காவல்துறையின் தடையை மீறி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கமுயற்சி செய்த திருநங்கைகளால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.