நீர் வெறுப்பு நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இன்மையால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

40 0

நீர் வெறுப்பு நோய் (விசர் நாய்க்கடி) குறித்து போதியளவு விழிப்புணர்வு இன்மை உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாக சமூக வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தற்போது  நீர் வெறுப்பு நோய்  சமூகத்தில் பாரிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.

நாட்டிலுள்ள சுமார் 300 அரசாங்க வைத்தியசாலைகள் நீர்வெறுப்பு நோய்க்கான தடுப்பு மருந்தை வழங்குகின்றன. கடுமையான கடி ஏற்பட்டால், அது தொடர்பான தடுப்பூசியும் சுமார் 100 வைத்தியசாலைகளில் வழங்கப்படுகிறது.

இது இலவசமாக வழங்கப்படுகிறது. நாம் செய்ய வேண்டியது விலங்கு கடிக்கு உள்ளானால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இந்த ஆண்டு  நீர்வெறுப்பு நோய் தொடர்பில் 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நீர்வெறுப்பு நோய் உள்ள விலங்கு கடி மூலம் அல்லது நீர்வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு எமக்கு ஏற்பட்டுள்ள காயத்தை நக்கினாலும் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும், இது காயம் இல்லாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள சளி சவ்வுகள் மூலம் இது உறிஞ்சப்படுகிறது.

பொதுவாக, இந்த வைரஸ் உடலில் நுழைந்து அறிகுறிகள் தோன்றும் நேரம் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் ஆகும். விலங்கு கடித்த ஒருவருக்கு நீர்வெறுப்பு நோய் தடுப்பூசியை பெறவில்லையாயின் இன்னும் ஒரு வாரமோ, இரண்டு வாரமோ என்று நினைக்காமல் மூன்று மாதங்கள் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்” என தெரிவித்துள்ளார்.