மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

317 0

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட கரை எழில் நூலில் கிளிநொச்சியும் மலையக மக்களும் என்ற கட்டுரை தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் தாய் தந்தை பெயர் தெரியாதவர்கள், வன்னி மலையக பெண்களின் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதாகவும், ஈழப் போராட்ட இயக்கத்தில் தேசப்பற்றில்லாமல் கௌரவத்துக்காகவே மலையக மக்கள் இணைந்துக் கொண்டிருந்ததாகவும் மலையக மக்களை கொச்சைப்படுத்தும் வண்ணமான கட்டுரையொன்று எழுதப்பட்டிருந்தது.

இவ்வாறான கருத்துக்களை தன்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மலையக தமிழர்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்களுக்கும் மத்தியில் ஒரு உறவு பாலத்தை ஏற்படுத்துவதற்கே தாம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பிரதேசவாதத்துடன் செயற்பாடாது, ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் ஈழப் போராட்டத்திற்காகவே பல முறை சிறைவாசம் அனுபவித்திருந்ததாகவும் அவர் நினைவுப்படுத்தியுள்ளார். அத்துடன், ஈழப் போராட்டத்தில் மலையக தமிழர்களே அதிகளவில் உயிர்நீத்திருந்ததாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.