பிரிட்டனில் ஜூன் 8-ம் தேதி பொதுத் தேர்தல்: பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

276 0

பிரிட்டனில் முன்கூட்டியே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றி பெற்றுள்ளார்.

பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய அவர், பொதுத் தேர்தலை ஜூன் 8-ம் தேதி நடத்த அனுமதி அளிக்கும் தீர்மானத்தை கொண்டு வரும்போது, அதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்படி, ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த அனுமதி அளிக்க கோரி பாராளுமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தை தொடங்கிய பிரதமர் தெரசா மே, தேர்தல் நடத்தவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கினார். நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் மற்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டபிறகு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், 522 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். 13 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். இதனால் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.