தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணயச் சபையை அழைத்துச் பேசி அந்த தீர்மானத்தை செயற்படுத்தத் தேவையான சட்டங்களை கொண்டுவர தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமலிருக்கும் சேமலாப நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை அடுத்த வருடத்திலிருந்து முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுடன் இன்று சனிக்கிழமை (10) கண்டி கரலிய மண்டபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இதன்போது தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியிடன் நேரடியாக முன்வைக்கப்பட்டதோடு, அதற்கு ஜனாதிபதி சாதகமான பதில்களையும் வழங்கியிருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எப்படியோ தற்போது நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாவிட்டாலும், மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டை விட மக்கள் சுமூகமாக வாழும் நிலைமை உருவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே எம்மால் அவ்வாறானதொரு நிலையை உருவாக்க முடிந்தது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டியுள்ளோம்.
அதன்படி 2042 ஆம் ஆண்டு வரை நாங்கள் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். இந்த உடன்படிக்கைகளில் இருந்து நாம் விலகிக் கொண்டாலோ அல்லது திருத்தம் செய்ய முயற்சித்தாலோ அதன் பலன்களை இழக்க நேரிடும். அப்போது ஒரு நாடாக நாம் பழைய நிலைக்குத் தள்ளப்படுவோம். மீண்டும் வரிசை யுகம் வரும். எனவே இந்த திட்டத்தை தொடருவோமா அல்லது கைவிடுவோமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்து நாம் திருப்தியடைய முடியாது. இந்தியாவைப் போல நாமும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். 2048 ஆம் ஆண்டுக்குள் அந்த விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதனால் நாட்டை பொறுப்பேற்கத் தலைவர்களை தேடப் போகிறோமா அல்லது ஒலிம்பிக் போட்டிகளில் ஓடுவதற்கு தலைவர்களை தேடுகிறோமா என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.
தோட்ட தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கும் பணிகள் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதால் அதனை வழங்கும் இயலுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும்.
மேலும், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தோட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது. மேலும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் அந்த நிவாரணத்தை தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 07 பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்குப் பின்னர் அந்த அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் நிர்ணயச் சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவும் அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை சட்டமாக்கவும் முயற்சிகளை முன்னெடுப்போம்.
அந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பழனி திகாம்பரன் எம்.பி ஆகிய இருவரும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான்
”எனக்கு கெபினட் அமைச்சு பதவி வழங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த காலப்பகுதியில் என்னால் முடிந்த வரையில் சேவைகளை செய்திருக்கிறேன். கண்டி மாவட்டத்திற்காக மாத்திரம் 160 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கண்டி மாவட்டத்திற்கு இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை.
அதேபோல் கண்டியிலும் பதுளையிலும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கவுள்ளோம். அதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளோம். 10 இலட்சம் தோட்ட மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் பேர் மட்டுமே தோட்ட தொழில் செய்கின்றனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பு வழங்குவதை விரும்பவில்லை. சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது. சம்பள விடயத்திற்கு மேலாக ஜனாதிபதி மலையகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்புக்குத் தேவையான சகல முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது சம்பள அதிகரிப்புக்கு இணங்கியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன்
”மலையக மக்களின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார். 10 பேர்ச்சஸ் காணிகளை வழங்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். கல்வி அபிவிருத்திக்கு அவசியமான நிதியையும் ஒதுக்கியுள்ளார்.
ஜனாதிபதி 1,700 சம்பள அதிகரிப்பு தொடர்பில் சொன்ன விடயங்களை மட்டும் பேசும் எதிர்கட்சியினர். மக்களின் அபிவிருத்திக்காக கூறிய அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு பேசுகின்றனர்.
நாட்டில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி வந்தபோது நாட்டை காப்பாற்றியவர் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.” என்றார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த
”இன்று மலையக மக்களின் காணி மற்றும் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதை நாட்டின் தலைவர் உணர்ந்துகொண்டுள்ளார். எனவே அவரின் வழிகாட்டலின் கீழ் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
இந்த முயற்சிகள் அனைத்தும் தேர்தலை இலக்கு வைத்தவை அல்ல. அதற்காக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்கமுள்ள தலைவர்களை நியமிக்க வேண்டும். எனவேச இன,மத பேதமின்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க அனைவரும் ஒற்றுமையாக முன்வர வேண்டும்.” என்றார்.
நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன,
”கண்டி மாவட்டத்தில் இருக்கும் 07 பொதுஜன பெரமுன எம்.பிகளில் 06 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். அதேபோல் அமைச்சர் தொண்டமானின் ஆதரவும் கிடைத்துள்ளது. தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கவும் ஜனாதிபதி வழி செய்திருக்கிறார். இந்த பணிகளை அவர் தேர்தலை இலக்கு வைத்துச் செய்யவில்லை.” என்றார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார,
”கடந்த இரண்டு வருடங்களில் தோட்ட மக்களுக்காக பல பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. பெருந்தோட்ட மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் ஜனாதிபதி முன்னெடுப்பார்.
தேர்தல் நோக்கத்தை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் பணிகளை ஆரம்பித்தார். இந்த அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற நாள்முதல் தோட்ட மக்களின் உரிமைக்காக அர்ப்பணித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் போது தோட்ட தொழிலாளர்கள் வழங்கிய பங்களித்து எத்தகையது என்பதை ஜனாதிபதி அறிவார்.
உங்கள் காணி பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்குப் பின்னர், இதுவரையில் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. அதனால்தான் சம்பள நிர்ணயச் சபையை அழைத்து நாள் சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கக் கூறினார். அதற்கான எதிர்ப்புக்களை தெரிவிக்கவும் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன் பின்னரே கடந்த மே மாதம் முதலாம் திகதி கொட்டகலையில் அது தொடர்பிலான அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதன் பின்னர் தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு பெற்றன. அதனால் அதற்குரிய மாற்று வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறோம்.
தொழில் அமைச்சின் வர்த்தமானி வாபஸ் பெறப்பட்டமையினால் தோட்ட கம்பனிகளும் வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எவ்வாறாயினும், சம்பள நிர்ணயச் சபை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளது. நாளாந்த கொடுப்பனவாக 1350 ரூபாவும் உற்பத்தி கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் ஆதாயம் பெற சிலர் முயற்சிக்கின்றனர்.
தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதி என்ற வகையில் பழனி திகாம்பரம் எம்.பி எந்தவித யோசனைகளையும் கொண்டுவரவில்லை. மாறாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைக்கும் யோசனையின்படி சம்பளம் அதிகரிக்கப்படுமாக இல்லையா என்பதை மாத்திரம் கேட்கிறார்கள்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.