சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை

265 0

டெல்லியில் கைதான சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை விரைந்த டெல்லி போலீசார் டிடிகே தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா அணியும், ஓ.பி.எஸ். அணியும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அத்துடன், இரட்டை இலையை யாருக்கு வழங்குவது? என்பது குறித்து இரு தரப்பினரிடமும் பிரமாணப் பத்திரங்கள் பெற்று அதன் அடிப்படையில் முடிவு செய்ய உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சுகேஷ் சந்தரை டெல்லி போலீசார் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், கிடைத்த புதிய தகவல்களை அடுத்து, சென்னை விரைந்த டெல்லி போலீசார், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று சம்மன் அளித்தனர். சம்மனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.