காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -எம்.ஏ. சுமந்திரன்

259 0

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தமே கேப்பாபுலவில் இடம்பெற்று வருவதாக கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை  தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்காது வீதி ஒரங்களில் மக்களை காத்திருக்க வைத்திருப்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழகு இல்லையென வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்குமிடையில் கடந்த திங்கட்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்தினர் வசமுள்ள காணிளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட செயலகங்களில் கூட்டங்களை நடத்தி தீர்வு காண இணக்கம் காணப்பட்டது

இதற்கமைய இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று  பிற்பகல் 2 மணியளவில்  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது

.குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான் முல்லைத்தீவு மாவட்ட கடற்படை, விமானப்படை, இராணுவ கட்டளைத் தளபதிகள், கோப்பாபுலவு மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு மக்களுக்கு அனுமதியில்லையென உதவி அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன் அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறும் வலியுறுத்தினார்.எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய கோப்பாபுலவு மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்..

இந்த கூட்டத்திற்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

எனினும் இந்த கூட்டத்தில் முழுமையாக  செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், படை அதிகாரிகள், அரசாங்க அதிபர், மக்கள் ஐந்துபேர்  உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர்.

கேப்பாபுலவு இராணுவ முகாமின் நுழைவாயிலில் மக்களின் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிழற்படங்களையோ, கானொளிகளையோ எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாடாளுடன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து மக்கள் தரப்பில் ஐந்து பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராச, எம்.ஏ. சுமந்திரன், கே. கே.மஸ்தான் ஆகியோர் காணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவு படுத்தினார்.

இதன்பிரகாரம் 111 ஏக்கர் காணிகளை மாத்திரமே தற்போது விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ள போதிலும், காணி விடுவிப்புக்கான கால எல்லை குறித்த உறுதி மொழியை அவர்கள் வழங்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட கேப்பாபுலவு மக்கள் பகுதியளவான காணி விடுப்பு வரவேற்கத்தக்க விடயம் என்கின்ற போதிலும் அனைவரின் காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என வலியுறுத்தினர்.

மக்களின் கோரிக்கையை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எஞ்சிய காணிகளை விடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டார்.

இன்றைய காணி அடையாளப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

கேப்பாபுலவில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் என அடையாளம் காட்டப்பட்ட குடியிருப்பு அல்லாத  காணிகளை விடுத்து விடுவிக்கவேண்டிய தமது பூர்வீக  காணிகளை தாம் அடையாளம் காட்டியதாக முகாமுக்குள் சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்

தமது வாழ்வாதாரங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதை நேரில் கண்டு மிகவும் கவலையடைந்தாகவும் தமது காணிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் தேங்காய்களை பறித்து வைத்திருப்பதாகவும் தமது  காணிகளில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடாத்துவதாகவும் தாம் வீதியில் கிடந்தது சாவதாகவும்  அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான சென்ற காணி உரிமையாளர் ஒருவர் கவலை வெளியிட்டார்

இதேபோன்று இராணுவத்தினர் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதனாலேயே காணி விடுவிப்பில் எழுத்தடிப்பு செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோர் தெரிவித்தனர்.