முல்லைத்தீவு தண்ணீரூற்றில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் பொறுப்பற்ற நடத்தை தொடர்பில் தங்களின் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள் அது தொடர்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நீண்ட நாட்களாக அவதானிக்க கூடியதான இந்த செயற்பாடு முகம் சுழிக்க வைப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தண்ணீரூற்று சந்தைக்கு அருகாமையில் உள்ள இந்த பிரபல வர்த்தக நிலையத்தின் முன்பாக நீர் தேங்கி சதுப்பாக நிலம் மாறியுள்ளதால் அந்த இடத்தில் மக்கள் சிரமத்தினை எதிர்கொள்வதனை அவதானிக்கலாம்.அருகில் வர்த்தக வங்கியொன்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் மற்றொரு கடையும் கூடவே இருப்பதால் அதிகளவான மக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் பிரதான வீதியுடன் இணைந்த இந்த நிலத்தினை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பேணுதல் அவசியம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்கு முன்னுள்ள நீர் தேங்கி சதுப்பாகிய நிலத்திற்கு சற்று மேலாக எண்ணெய் விற்பனைக்கான கொள்கலன்கள் வைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இருந்து எண்ணெய்யினைப் பெற்று விற்பனை செய்யும் போது நிலத்தில் சிந்தும் எண்ணெய் மண்ணில் தேங்கி கசிவினை உருவாக்கி விடுகின்றது.
இந்த நிலைமை நீண்ட நாட்களாக இருந்து வருவதாக மக்களில் பலர் குறிப்பிடுகின்றனர்.வர்த்தக நிலைய உரிமையாளர் இதனை தவிர்த்துக்கொள்ள உரிய முறையிலான ஒழுங்கமைப்பினைச் செய்து கொள்ளாமையே இந்த அவலத்திற்கு காரணம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
பரபரப்பாக எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வர்த்தக நிலையத்தின் முன்னுள்ள பகுதியில் சுத்தத்தினை பேணுவதில் பிரதேச சபையினரும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.
அதிகளவான மக்கள் வந்து செல்லும் இடமாக இந்த இடம் இருப்பதோடு இந்த வர்த்தக நிலையத்திற்கு அதிகளவான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்காக வந்து செல்கின்றனர்.
எண்ணெய் மண்ணில் சிந்துவதால் ஏற்படும் கசிவும் மழைபெய்து தேங்கும் நீரால் ஏற்படும் சதுப்பும் மக்களின் இயல்பான செயற்பாடுகளுக்கு இடையூறாகவே இருந்து வருவது கண்டுகொள்ளப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கழிவுகளை சீரான முறையில் அகற்றி நகரின் வீதிகளையும் வியாபார நிலையங்களின் முன்றலையும் சுத்தமாக பேணுவதில் வர்த்தக சங்கமும் பிரதேச சபையும் ஒன்றிணைந்து ஒத்திசைவோடு திட்டமிட்டுச் செயற்படுதல் அவசியம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.