சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம்

25 0

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த  மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை அத்துடன் குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று(09.08.2024) மாலை மத்திய சுகாதார அமைச்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரணம் தொடர்பாக ஆரம்ப விசாரணைகள் பல கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளன.

அதில் சிலர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளதாக அறிகிறோம். அதில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்களும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும், ஒரு மருத்துவரும் மன்னார் மாவட்டத்திற்குள் உள்ளக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிகிறோம்.

இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ தினத்தன்று சம்பந்தப்பட்ட யாவருக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஒரு இடமாற்றமாக இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வைத்திய அதிகாரிகளை காப்பாற்றுவதாகவே அறிகிறோம்.

சட்ட வைத்திய அதிகாரி உள்ளதை உள்ளபடி அறிக்கை இடுவதற்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் அறிகிறோம். எனவே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்து போகிறது.

வழமையான மருத்துவ தவறுகள் போல் இதனையும் மாற்றிவிட முனைவதாக நாம் எண்ணுகிறோம். தவறிழைத்தவர்கள் மீது கால தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த எந்த ஒரு விசாரணையானது உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தது இல்லை. இவ்வாறு அரைகுறையாக கண்டு பிடித்தவர்களுக்கு கூட நடவடிக்கை எடுத்தது இல்லை.

அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் சரி இந்த நாட்டின் சாபக்கேடு. நீதியை நிலை நாட்டுவதில் எப்பொழுதும் தோற்றே போகிறது இலங்கையின் ஜனநாயகம். இவ்வாறு தொடர்ந்து உண்மைகளை மூடி மறைத்தால் அரச வைத்தியசாலை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

இதனால் பாதிக்கப்பட போவது சாமானிய பொதுமக்களே .எனவே இதன் மூலம் தனியார் வைத்தியசாலைகளை நாடும் நிலையை ஏற்படுத்த போகிறீர்களா? ஆகவே நீதி நிழலாடும் பட்சத்தில் வைத்தியசாலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.