மீதொட்டமுல்லை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை

250 0
மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மீதொட்டமுல்லை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வீடுகள் முழுமையாக சேதமடைந்த 98 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எதிர்வரும் சில மாதங்களில் அப்பிரதேசத்திலுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும், சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடைசெய்யவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.