பிரிட்டன் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

29 0

பிரிட்டனில் நிலவும் அமைதியின்மை நிலைவரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கேட்டறிந்ததாகவும், பிரிட்டன்வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை நேற்று வியாழக்கிழமை (08) பிரிட்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த ரோஹித்த போகொல்லாகம, அவர்களுடன் பிரிட்டனில் நிலவும் அமைதியின்மை நிலைவரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது குறிப்பாக ‘பிரிட்டனின் சில பகுதிகளில் மக்கள் அமைதி சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடம் கேட்டறிந்ததுடன், இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொண்டார். அதன்படி இதுகுறித்து நாம் பிரிட்டன் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடிவருவதுடன், நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உத்தரவாதமளித்திருக்கிறோம்’ என உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அத்தோடு பிரிட்டன்வாழ் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறும், உள்நாட்டு செய்திகள் மற்றும் அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பிரிட்டனினில் பல்லின, பல்கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 750,000 இலங்கையர்கள் வாழ்வதாகவும், அவர்கள் கடந்த பல வருடகாலமாக பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்குப் பங்களிப்புச்செய்துவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ரோஹித்த போகொல்லாகம, இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையில் நீண்டகாலமாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் நன்மதிப்பின் அடிப்படையிலான நல்லுறவு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

‘பிரிட்டனில் நீடித்து நிலைத்திருக்கும் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சி ஆகிய கோட்பாடுகளை மையப்படுத்தியே அந்நாடு நிறுவப்பட்டிருக்கின்றது. எனவே பிரிட்டனின் உரிய அதிகாரிகள் இந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரிட்டன்வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 1044 7475206220ஃ 020 7262 1841 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது mail@slhc-london.co.uk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ உயர்ஸ்தானிகரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் ரோஹித்த போகொல்லாகம கேட்டுக்கொண்டார்.