எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது கட்சி சார்பற்றது

33 0

எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது பாகுபாடற்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களின் சுமையைக் குறைத்து அடுத்த தலைமுறைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கையிலுள்ள அனைத்துப் பெண்களிடமும் கேட்டுக் கொண்டார்.

அன்று உணவு வழங்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இந்நாட்டு தாய்மார்கள் அனுபவித்த துன்பங்களை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று மேடைகளில் தேசப்பற்றையும், மக்களின் துன்பங்களையும் பேசும் தலைவர்கள் சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

“பெண்கள் எமது பலம்” எனும் தொனிப்பொருளில் இன்று (09) கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மண்டபத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கட்சி வேறுபாடின்றி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பெண்கள் அமைப்புக்கள் மற்றும் கட்சி கிளைச் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பிரதிநிதிகள் பெருமளவானோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மீண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுதிமொழி வழங்கினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நெருக்கடியான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், இந்நாட்டுப் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதை தாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதற்கான சட்டக் கட்டமைப்பை அமைப்பது உட்பட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் ஏன் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பசி கட்சி சார்பற்றது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பசி உணரப்படுகின்றது. வயிற்றைப் பட்டினி இன்றி நிரப்புதல் நடுநிலையானது. எ

னவே, அரசியல் கட்சி நிற பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு மக்களின் வயிற்றை நிரப்ப ஒன்றிணைய வேண்டும். இந்நாட்டு மக்கள் படும் துன்பங்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன். மின்சாரம் இல்லாமல், எரிபொருள் இல்லாமல், உணவு இல்லாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் நீங்கள் அனைவரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டீர்கள்.

நாம் மீண்டும் இந்த துன்பத்தை சந்திக்க வேண்டுமா? அந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஏனையவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்காமல் ஓடியதால்தான் நான் ஜனாதிபதியானேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சஜித் பிரேமதாச மற்றும் அநுர திஸாநாயக்க ஆகியோரிடம் “இந்த சிரமங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற அவர்கள் எங்களை ஆதரிக்கவில்லை.

அதன்போது, எனக்கு மூன்று பெண்கள் ஆதரவு வழங்கினர். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம், அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகிய 3 பெண்கள்.

தேசப்பற்று குறித்து பேசுபவர்கள், மக்கள் படும் துன்பங்கள் தமக்குத் தெரியும் என்று கூறியவர்கள் அன்று ஓடினார்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த மூன்று பெண்கள் நாட்டை முன்னேற்ற உதவினார்கள். இந்த மூவரின் உதவி இல்லாவிட்டால் இன்று நாம் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.

இந்நாட்டில் உரம் இல்லாத போது அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா பவர் எங்களுக்கு ஆதரவளித்தார். அந்த உரத்தை வழங்கியதன் காரணமாக அந்த சிறு போகத்தில் வெற்றி பெற்று பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு வர முடிந்தது. எனவே அந்தப் பெண்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

சிறந்த தேசபக்தர்கள், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவரும் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஒரு நாடாக முன்னோக்கி வந்தோம். நாம் மேலும் செல்ல வேண்டும். நாம் அனைவரும் பட்ட துன்பங்களைச் கூறத் தேவையில்லை.

உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன். 2021 ஆம் ஆண்டில், வணிக வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்களின் மதிப்பு 250 பில்லியன் ரூபா. இன்று அது 500 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது. எனவே, அது தொடர்பில் நாம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

சில வீடுகளில் பெரியவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுவார்கள். மற்றொரு பிரிவினர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியாமல் தவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நான் ஆதரவைக் கோரியபோது வழங்கிய உதவியினால் இன்று இந்த நிவாரணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். ஜெனட் யெலன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எங்களுக்கு ஆதரவளித்தனர். இன்று நாங்கள் வலுவாக முன்னேர முடிந்தது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கும் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம். நாங்கள் அதன்போது இணங்கிய நிபந்தனைகளை பொருளாதார பரிமாற்றச் சட்டத்தில் சேர்த்துள்ளேன். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால், ஒரு நாடாக நாம் மீண்டு வரக்கூடிய திறன் உள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் திருத்தப்படும் என சிலர் கூறுகின்றனர். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துவிட்டு தப்பி ஓடியவர்கள் இன்று பெண்களின் ஆதரவுகளால் கிடைத்த இந்த நிவாரணத்தை அகற்றுவோம் என கூறுகிறார்கள்.

நாங்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு இந்தப் பயணத்தை வந்துள்ளோம். எனவே, இந்த நிவாரணத்தை இழப்பதா அல்லது பாதுகாப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன்போது, முகத்தையோ பெயரையோ பார்க்காமல்  தான் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டும், நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும்.

இந்த கடினமான பயணத்திலும் இந்த நாட்டு பெண்களை நான் மறக்கவில்லை. அஸ்வெசும, உறுமய, குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு உரிமை வழங்குதல், மலையகத்தில் கிராமங்கள் அமைக்கும் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் போன்ற வேலைத்திட்டங்களை செயல்படுத்தி நிவாணரங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று, பெண்களை வலுவூட்டவும் நாம் நடவடிக்கை எடுத்தோம்.

அதற்காக பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். 20-30 வருடங்களாக இந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைக்கான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இப்போது அவற்றைப் பேசித் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும். இப்படி சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளையில் இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பெண்களுக்கு சம உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமைகளை வழங்குவதற்கான முதல் சட்டத்தை இப்போது கொண்டு வந்துள்ளோம். மேலும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்க சட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும் இந்நாட்டில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதைக் கூற வேண்டும்.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிராம மட்டத்தில் உள்ள முக்கிய பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அடுத்த வருடம் ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டவுள்ளோம்.

நாம் அனைவரும் ஒரு நல்ல நாட்டை விரும்புகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நாடு தேவை. அதற்கு முன் நம் வீடுகளில் உள்ள வாழ்க்கைச் சுமையைக் களைந்து முன்னேறுவோம். நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வனசீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, 

இன்று இது மிகவும் சிறப்பான பெண்கள் சந்திப்பு என்றே கூற வேண்டும். இதற்கு முன்னரும் பெண்கள் மாநாடுகளை நடத்தியிருந்தாலும், எனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல கட்சிகள் பங்கேற்கும் மகளிர் மாநாட்டில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறை. இன்று நாம் ஏன் ஒன்றாக இருக்கிறோம்? அதற்கு உரையாடல்கள், விவாதங்கள், வாதங்கள் தேவையில்லை. பங்களாதேஷின் நிலைமையை தொலைக்காட்சி முன்நின்று பார்த்தால், நாங்கள் ஏன் ஒன்றாக இணைந்தோம் என்பது தெளிவாகத் தெரியும்.

பங்களாதேஷ் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் பாராளுமன்றத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதுவரை 20இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த போரட்டக்காரர்ககளின் செயற்பாடுகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது எமது நாட்டிலும் அன்றைய தினம் அதுபோன்ற ஒன்றுதான் நடந்தது என்பது தெளிவாகின்றது.

பங்களாதேஷ் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றுலா விடுதிகள் மற்றும் அரச நிறுவனங்களை எரித்து அழித்துள்ளனர். பங்களாதேஷ் முழுவதும் நெருப்புக் குவியல் ஆகிவிட்டது. இவ்வாறான நிலையில் இன்று பங்களாதேஷ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவர் இந்த தாய்நாட்டிற்கு இருந்தமையினால் அவ்வாறானதொரு நிலைமையை நாம் அப்போது எதிர்கொள்ளவில்லை. அத்துடன், நாட்டின் முன்னாள் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிய போது, இந்த தாய்நாட்டில் இரத்தம் சிந்துவதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தை நிறுவி நாட்டை மீட்டெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

இன்று நாட்டில் சரியான தீர்மானங்களை எடுக்கும் பெண்களாகிய நாம் அவரின் வெற்றிக்காக கட்சி நிற பேதங்களை ஒதுக்கி ஒரே குடும்பமாக ஒன்றிணைந்துள்ளோம்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  கீதா குமாரசிங்க, 

நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களாகிய உங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய தீர்மானம் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த முக்கிய முடிவை எடுக்காவிட்டால், நாடு பின்னோக்கி செல்வதைத் தடுக்க முடியாது.

இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே. அன்று எமக்கு எரிவாயு, பிள்ளைகளுக்கு பால் மா  இருக்கவில்லை. அப்போது பொருளாதாரம் வங்குரோத்தாகி விட்டதாக கூறியபோது, இந்த நாட்டைப்பொறுப்பேற்க  எதிர்க்கட்சி இருக்கவில்லை. எதிர்க்கட்சியினர் தலைமறைவாகினர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமக்கு உயிர் மூச்சைத் தந்தார். ஒரு பெண் குழந்தையைப் பெற, அவள் வலுவாக இருக்க வேண்டும். அதனால் தான் அந்த பெண்களுக்கு வலுவூட்டும் வகையில் ஜனாதிபதி 10 மாதங்களுக்கு போசாக்குப் பொதிகளை வழங்கினார். பெண்களால்தான் இந்த நாட்டை வலுப்படுத்தி நாட்டை முன்னேற்ற முடியும். ஜனாதிபதி தலைமையில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

70 களில் இருந்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்தது யார்? இளைஞர்களைக் கொன்று சாக்கடையில் வீசியது யார்? அவ்வாறானவர்களே இன்று நாட்டின் அதிகாரத்தைக் கேட்கின்றனர். பின்னோக்கிச் செல்லும்  நாடு எமக்கு வேண்டாம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை, சாதாரண வெற்றியாகவன்றி, மாபெரும் வெற்றியாக மாற்றுவோம்.

பாராளுமன்ற உறுப்பினர்  கோகிலா குணவர்தன

இந்த நாட்டின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை பெண்களின் பலத்துடன் தெரிவுசெய்ய இந்த நாட்டின் எட்டுத் திக்கில் இருந்தும் நீங்கள் வந்துள்ளீர்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர, தகுதியான எவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இல்லை.

இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய போது பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே, அன்று தான் நான் உங்களுக்கு முதன் முதலில் வாக்களித்தேன்.

அன்று வாக்களித்ததை நினைத்து இன்று  நான் மகிழ்ச்சியடைகிறேன். அன்று நான் அளித்த வாக்குக்கு இந்த நாட்டு மக்களுக்கான பெறுமதி கிடைத்ததாக இன்று உணர்கிறேன். இந்த நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த வேளையில் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவர் அதை மறுத்துவிட்டார். அடுத்ததாக அனுர திஸாநாயக்கவிடம்  கேட்கப்பட்டது. ஆனால், அன்று இந்த நாடு இருந்த பொருளாதார நிலையைக் கண்டு, அந்தப் பொறுப்பை ஏற்க அஞ்சினார்கள். அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை அப்போது தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்தார்கள்.

ஆனால் எவரும் ஏற்றுக்கொள்ள மறுத்த தருணத்தில் இந்த நாட்டைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை  ஏற்றுக்கொண்டார். நாம் அவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் அவ்வாறே பாதுகாத்தார்.

அவரது வார்த்தைகளின்படி, தொங்கு பாலத்தைத் தாண்டி இந்த நாட்டைக் கடக்கக்கூடிய ஒரே தலைவர் அவர் மாத்திரமே என்பதை அவர் தனது செயல்களால் நிரூபித்துள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவரது வெற்றிக்காக இன, மத, கட்சி, நிற வேறுபாடுகள் இன்றி நாம் ஒன்று திரண்டுள்ளோம் என்பதை இந்நாட்டு பெண்கள் பிரதிநிதிகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய மகளிர் குழுவின் முன்னாள் தலைவி  பியட்றிஸ் திஸாநாயக்க

பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை இந்த மண்டபம் நிரப்பியுள்ளதைப் பார்க்கும் போது தெளிவாக புரிகிறது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அனைத்து தாய்மாரின் ஒரே எதிர்பார்ப்பாகும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். அதற்குத் தேவையான பின்னணியை யாரால் தயார் செய்ய முடியும் என்பதை தெரிந்துள்ளதால் இங்கு நீங்கள் கூடியுள்ளீர்கள். உங்கள் முடிவு சரியானதே.

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புத்திசாலித் தலைவர் இங்கு இருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்பது இந்த நாட்டின் இல்லத்தரசிகளை விட வேறு யாருக்கும் தெரியாது. பெண்களாகிய நீங்கள் அவருடைய வெற்றிக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவரது வெற்றி நிச்சயம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் நிர்வாகச் செயலாளர் குமாரி பத்திரகே

அன்று இந்நாட்டு மக்கள் வரிசையில் நின்றனர். தாய்மாரின் நெஞ்சில் நெருப்பு எரிந்து கொண்டிருந்த போது, அந்த நெருப்பை அணைக்க நமக்கு ஒரு தலைவர் இருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே இந்நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்டார்.

அவர் நமக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்கினார். எங்கள் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவதற்கான பின்னணியை அவர் உருவாக்கினார். அவர்தான் எமது பிள்ளைகளை பசியிலிருந்து காப்பாற்றினார். நாடு வங்குரோத்தடைந்து,  பொருளாதாரம் வீழ்ச்சியுற்றபோது  எமக்காக புதிய நாட்டைக் கட்டியெழுப்பியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

எங்களுக்கு வேறு புதிய தலைவர்கள் தேவையில்லை. இன்று பெருமை பேசுபவர்கள், அன்று நாட்டின் பொறுப்பை ஏற்க மறுத்து ஓடி ஒளிந்தனர்.  இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒரே பொறுப்பு. தன் சொத்துக்கள் அனைத்தையும் இந்நாட்டுக்கு தானம் செய்த தலைவர்.

இன்று இங்கு கூடியுள்ள பெண்களுக்கு அரசர்கள் தேவையில்லை. புதிய முகமூடிகளைக் கொண்டு வந்து, மக்கள் துயரங்களுக்கு உள்ளாகும் நிலையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. இனியும் ஏமாற மாட்டோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவது நிச்சயமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே. அதனால்தான் நாங்கள் அதற்காக ஒண்றிணைந்துள்ளோம்.

ஐக்கிய லக்வனிதா முன்னணியின் தலைவர்  சாந்தினி கோங்கஹகே

டி. எஸ். சேனநாயக்க அவர்களால் நிறுவப்பட்ட கட்சியின் தலைவர் ஒருவர் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். கட்சி சார்பற்ற ஒரு வேட்பாளருக்கு ஏன் வாக்களிக்கிறோம் என்பதை இந்நாட்டின் பெரும்பாலான பெண்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

வரலாற்றின் இருண்ட காலத்திலிருந்து பெண்களை மீட்டெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. எமது பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரேயொரு கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க பெண்கள் வரிசையில் நிற்கின்றனர். மற்ற அனைத்துக் கட்சிகளும் வெவ்வேறு நிறங்கள், கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். கட்சி அடிப்படையில் நாம் மேலும் பிளவுபட வேண்டுமா?

பெண்களாகிய நாம் அந்த வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்காக வாக்களிப்போம். ஏனென்றால், நமது நாட்டை மற்றொரு பங்களாதேஷாக மாற்ற இடமளிக்க முடியாது. அன்று எங்களுக்கு உதவிய பங்களாதேஷ் இன்று இருக்கும் நிலைக்கு வருந்துகிறோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எமது தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் என்பதைக் கூற வேண்டும். இந்த நாட்டில் பெரும்பான்பாலான பெண்களுக்கு துணிச்சலாக செயற்படும் வாய்ப்பை வழங்கியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. எனவே இந்த நேரத்தில் நாம் ஒன்றிணைந்து எமது கடமையை நிறைவேற்றி கட்சி சார்பற்ற வேட்பாளரான ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

மலையக இளம் பெண்கள் முன்னணியின் உறுப்பினர் கனிஷ்கா மைக்கல்,

மலையக மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் மலையக பெண்கள் அணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்து உள்ளனர். யார் தலைவர் என்பதை நாம் பார்க்க வேண்டும்.  சவால்களுக்கு அஞ்சி, கிடைத்த வாய்ப்பைத் தட்டிக்கழித்து புறமுதுகிட்டு ஓடிவயர்களா தலைவர்கள்? தலைபோனாலும் போகட்டும், மக்கள் வாழவேண்டும் என்று நினைத்து சவால்களை ஏற்றவரே எமது தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. ஐ.எம்.எப்  ஐ, விமர்சித்து அரசியல் நடத்தியவரா தலைவர்? ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டிற்கு நிதி கொண்டு வந்து எமது நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவரே எங்கள் தலைவர்.

வறுமையை ஒழிப்போம் என்று  வெறும் கூச்சல் போடுபவர்களா தலைவர்கள்? இல்லை. மாறாக வறுமையைப் போக்க ‘அஸ்வெசும’ கொண்டு வந்தவரே எங்கள் தலைவர். மக்கள் பரிதவிக்கும்போது, நிபந்தனைகளை முன்வைத்துக்கொண்டிராது அவர்களின் கண்ணீரைத் துடைத்த தலைவரே எமது ஜனாதிபதி.

நாட்டை ஸ்திரப்படுத்தி இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை பாதுகாத்தவர் அவர். மலையகத்தின் தமிழ் பேசும் பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு இன்று இயங்குகிறார்கள் என்றால், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து கௌரவமான வாழ்க்கை வாழ வழிகொடுத்தவரே எமது தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

எமது நாட்டுக்காகவும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கவும்  நாங்கள் அனைவரும் எமது தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடன் ஒன்று சேர்வோம்.” என்றார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கிய பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.