எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : முதல் கட்ட நட்டஈடாக 10.2 மில்லியன் டொலர் கிடைத்தது !

22 0

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பல் நிறுவனம் முதல் கட்டமாக 10.2 மில்லியன் டொலரை முதற்கட்ட நட்டஈடாக வழங்கியுள்ளது. சட்டமா அதிபரின் அனுமதி இல்லாமல் நியூ டய்மன் கப்பலை இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றிய நபர் எதிர்க்கட்சித் தலைவரின் கரங்களை பலப்படுத்த எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மற்றும் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சட்டமா அதிபர் ஊடாக சிங்கப்பூர் நாட்டில்  சர்வதேச வணிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் பதில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இலங்கை சார்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி பதில் வாக்குமூலம் வழங்குவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.அதற்கான நடவடிக்கைகளை குறித்த ஆலோசனை நிறுவனமும்,சட்டமா அதிபர் திணைக்களமும் முன்னெடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச  வணிக நீதிமன்றில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.டென்டன் ரொடிக்ஸ் மற்றும் டோவிக்ஸன் ஆகிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் இலங்கைக்கு சட்ட ஆலோசனை ஒத்துழைப்புக்களை வழங்குகின்றன.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மாத்திரம் இவ்விவகாரத்தில் தனித்து செயற்பட முடியாது என்பதால் சர்வதேச மட்டத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

மதிப்பீடு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட துறைசார் நிபுணர் குழுவினர் இடைக்கால மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.இந்த கப்பல் விபத்து தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே நீதிமன்ற விசாரணைக்கு இந்த இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை பயன்படுத்தப்படுவதால் அறிக்கையை பகிரங்கப்படுத்துவது சாத்தியமற்றது.

இந்த விபத்தினால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் 10.2 மில்லியன் டொலரை முதல் கட்ட  நட்டஈடாக வழங்கியுள்ளது.கடற்றொழில் வளங்கள் அமைச்சின் ஊடாக இந்த 10.2 மில்லியன் டொலர்  செலவழிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் விபத்தினால் கரையொதுங்கிய கழிவுகளை அகற்றும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை போன்று நியூ டய்மன் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளானது.சட்டமா அதிபரின் அனுமதி இல்லாமல் இந்த கப்பலை இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேற்றுவதற்கு எமது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சு பதவி வகித்தவர் செயற்பட்டார் என்பதை அரசாங்கத்துக்குள் இருந்துக் கொண்டு  குறிப்பிட்டோம்.

நியூ டய்மன் கப்பலால் கடல் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக மதிப்பீடு செய்யாமல் கப்பலை வெளியேற்றியதால்  நட்டஈட்டை மதிப்பீடு செய்ய முடியவில்லை.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் எதிர்க்கட்சித் தலைவரின் கரங்களை பலப்படுத்த அவர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது என்றார்.